தமிழ்நாடு காவல்துறைக்கு 13 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்த சிறப்பு அந்தஸ்து

தமிழ்நாடு காவல்துறைக்கு 13 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்த சிறப்பு அந்தஸ்து
X
தமிழ்நாடு காவல்துறைக்கு குடியரசுத் தலைவர் சிறப்புக் கொடி அந்தஸ்து வழங்கப்படும் விழா வருகிற 31 ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது.

இந்தியாவில் 1856-ல் அப்போது மெட்ராஸ் மாகாணத்தில் தான் முதன்முதலில் காவல் துறை உருவாக்கப்பட்டது. காவல் துறையில் கைரேகைப் பிரிவு, தடய அறிவியல் பிரிவு, வயர்லெஸ் அமைப்பு, கடலோரக் காவல் படை என்று பல பிரிவுகள் என முதன்முறையாக தொடங்கப்பட்ட பெருமைகளை உள்ளடக்கிய தமிழக காவல்துறை, இந்திய காவல் துறையின் முன்னோடி எனப்பெயர் பெற்றது.

இப்படியாக பல பெருமைகளைக் கொண்டுள்ள தமிழ்நாடு காவல்துறைக்கு, குடியரசுத்தலைவரின் சிறப்புக்கொடியை வழங்கவேண்டும் என்று மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, முதலமைச்சராக இருந்தபோது கோரிக்கை விடுத்தார். இதனையடுத்து அப்போதைய காங்கிரஸ் அரசு, 2009-ல் அதற்கான ஆணையை பிறப்பித்தது. தமிழ்நாடு காவல் துறையின் 150ஆவது ஆண்டு விழாவையொட்டி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

பின்னர் சில நிர்வாக காரணங்களால் சிறப்பு அந்தஸ்து வழங்க முடியாமல் போக, 13 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது கிடைத்துள்ளது. இந்த சிறப்புக்கொடி இந்தியாவில் இதுவரை 10 மாநில காவல் துறைக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு காவல் துறைக்கு குடியரசுத்தலைவரின் சிறப்புக்கொடி அந்தஸ்து வழங்கும் விழா, பிரம்மாண்டமான முறையில் வருகிற 31 ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது. துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு முன்னிலையில் இந்த விழா நடைபெறுகிறது.

இந்த விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர்கள், உள்துறைச்செயலாளர், டிஜிபி சைலேந்திரபாபு, சென்னை மாநகர காவல் துறை ஆணையர் சங்கர் ஜிவால் உள்ளிட்ட உயர் காவல் அலுவலர்கள் பலரும் பங்கேற்கின்றனர்.

தமிழ்நாடு காவல்துறைக்கு வழங்கப்பட உள்ள குடியரசுத்தலைவரின் சிறப்புக் கொடியானது, ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் கோபுரத்துடன் வாய்மையே வெல்லும் என்று பொறிக்கப்பட்டிருக்கும் தமிழ்நாடு காவல் துறையின் சின்னத்தைப் பொருத்தி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சின்னம் பொறித்தப் பட்டையை காவலர் முதல் டிஜிபி வரை அனைவரும் தங்கள் சீருடையின் வலது தோள்பட்டையில் அணிந்து கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடியரசு தலைவர் சிறப்புக்கொடி என்பது மாநில/யூனியன் பிரதேசத்தின் ராணுவம், துணை ராணுவம் மற்றும் போலீஸ் படைகள் தேசத்திற்கு அவர்கள் ஆற்றிய சிறப்பான சேவையை அங்கீகரிக்கும் வகையில் வழங்கப்படும் ஒரு சிறப்புக் கொடியாகும்

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!