சிறப்பாக சேவைபுரிந்த மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக முதல்வர் விருதுகள் வழங்கல்
சிறப்பாக சேவைபுரிந்த மாற்றுத்திறனாளிகளுக்கு மற்றும் சிறந்த நிறுவனங்களுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் விருதுகள் வழங்கி சிறப்பித்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில், மாற்றுத்திறனாளிகளுக்காக சிறப்பாக சேவை புரிந்தமைக்காக சிறந்த சமூக பணியாளர் விருது, சிறந்த நிறுவனத்திற்கான விருது, சிறந்த ஆசிரியருக்கான விருது, சிறந்த பணியாளர் / சுய தொழில் புரிபவருக்கான விருது, மாற்றுத்திறனாளிகளை அதிக அளவில் பணியமர்த்திய நிறுவனத்திற்கான விருது, சிறந்த ஆரம்பநிலை பயிற்சி மைய ஆசிரியருக்கான விருது, மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பாக பணியாற்றிய ஓட்டுநர் மற்றும் நடத்துனருக்கான விருது ஆகிய விருதுகளை விருதாளர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி சிறப்பித்தார்.
மாற்றுத்திறனாளிகளின் வாழ்வினை மேம்படுத்தும் வகையில், அவர்களது கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் அதிகம் கவனம் செலுத்தி வருவதோடு, மாற்றுத்திறனாளிகள் சமுதாயத்தில் சுயமரியாதையுடனும், சம உரிமையுடனும் வாழ, மாத பராமரிப்பு உதவித்தொகை ரூபாய்.2000/- என உயர்த்தி வழங்கியது, தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் வாயிலாக மறுவாழ்வு இல்லங்கள் அமைப்பது போன்ற பல புதிய முன்னெடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதோடு மட்டுமல்லாமல், பொதுக் கட்டடங்களில் தடையற்ற சூழல் அமைப்பது, நவீன உதவி உபகரணங்கள் வழங்குவது போன்ற பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.
மாற்றுத்திறனாளிகளின் திறமைகளை ஊக்கப்படுத்தும் வகையிலும், சமுதாயத்தில் தன்னம்பிக்கையை வளர்க்கும் வகையிலும், அவர்களை ஒருங்கிணைக்கும் வகையிலும், ஒவ்வொரு ஆண்டும் மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பாக சேவைபுரிந்தவர்களுக்கும், சிறந்த நிறுவனங்கள் மற்றும் தடைகளை கடந்து சிறப்பாக பணியாற்றும் மாற்றுத்திறனாளிகளை ஊக்கப்படுத்தும் விதமாகவும் மாநில விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், மாற்றுத்திறனாளிகளுக்காக சிறப்பாக சேவை புரிந்தமைக்காக சிறந்த சமூக பணியாளர் விருதினை எ. மோகன் அவர்களுக்கும், சிறந்த நிறுவனத்திற்கான விருதினை தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி, ஆக்டிவ் மைண்ட்ஸ் தொண்டு நிறுவனத்திற்கும், சிறந்த ஆசிரியருக்கான விருதினை மனவளர்ச்சி குன்றியோருக்கு கற்பித்ததற்காக தி ஸ்பாஸ்டிக்ஸ் சொசைட்டி ஆஃப் திருச்சிராப்பள்ளி ஆசிரியர் அ. வாசுகி தேவி அவர்களுக்கும், செவித்திறன் குறைபாடுடையோருக்குக் கற்பித்தற்காக கிருஷ்ணகிரி அண்ணா நகர், நகராட்சி நடுநிலைப்பள்ளி ஆசிரியர் ஜா.அருண்குமார் அவர்களுக்கும், பார்வைத்திறன் குறைபாடுடையோருக்குத் கற்பித்ததற்காக மதுரை, செயின்ட் ஜோசப் பார்வையற்றோர் பள்ளி ஆசிரியர் அ. பாக்கியமேரி அவர்களுக்கும்; சிறந்த பணியாளர் / சுய தொழில் புரிபவருக்கான விருதினை கை, கால் பாதிக்கப்பட்டோர்/ தொழுநோய் குணமடைந்தோர் பிரிவில் எஸ். நீலாவதி (சிறந்த சுயதொழில் புரிபவர்), செ. சுதீஷ்குமார் (சிறந்த பணியாளர்), அறிவுசார் குறையுடையோர் பிரிவில் பா. முத்துக்குமார், செவித்திறன் பாதிக்கப்பட்டோர் பிரிவில் ரா. விஜயலெட்சுமி, பல்வகை மாற்றுத்திறனாளி பிரிவில் சௌந்திர வள்ளி, மனநோயால் பாதிக்கப்பட்டோர் பிரிவில் இ. ஜாக்குலின் சகாயராணி, புற உலக சிந்தனையற்றோர்/ குறிப்பிட்ட கற்றலில் குறைபாடுடையோர் பிரிவில் பிரேம்சங்கர் ஆகியோருக்கும்;
மாற்றுத்திறனாளிகளை அதிக அளவில் பணியமர்த்திய நிறுவனத்திற்கான விருதினை காஞ்சிபுரம் பச்சையப்பாஸ் சில்க்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கும், சிறந்த ஆரம்பநிலை பயிற்சி மைய ஆசிரியருக்கான விருதினை செவித்திறன் குறைபாடுடையோருக்குக் கற்பித்ததற்காக காஞ்சிபுரம் தமிழ்நாடு அரசு செவித்திறன் குறையுடைய இளம் சிறார்களுக்கான இலவச ஆரம்ப பயிற்சி ஆசிரியர் மைய எம். பாலகுஜாம்பாள் அவர்களுக்கும், அறிவுசார் குறையுடையோருக்கு கற்பித்ததற்காக கன்னியாகுமரி - சாந்தி நிலையம் மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பள்ளி ஆசிரியர் ஜெயசீலன் அவர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பாக பணியாற்றிய சிறந்த ஓட்டுநருக்கான விருதினை சுந்தர் வேலு அவர்களுக்கும், சிறந்த நடத்துனருக்கான விருதினை தர்சியஸ் ஸ்டீபன் அவர்களுக்கும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் விருதுகளை வழங்கி சிறப்பித்தார்.
இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை கமல் கிஷோர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu