முன்கூட்டியே திறக்கப்பட்ட மேட்டூர் அணை: சாதகமா, பாதகமா?

முன்கூட்டியே  திறக்கப்பட்ட மேட்டூர் அணை:  சாதகமா, பாதகமா?
X

டெல்டா மாவட்ட விவசாயம் ( கோப்புப்படம்)

டெல்டா மாவட்டங்களின் குறுவை சாகுபடிக்காக, மேட்டூர் அணையை முன்கூட்டியே முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்

தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களின் குறுவை சாகுபடிக்காக, ஜூன் 12 -ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படுவது மரபாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த ஆண்டு காவிரிநீர் பிடிப்பு பகுதியில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருவதால், தமிழ்நாட்டிற்கு வரும் காவிரி நீரின் வரத்து, வினாடிக்கு 40 ஆயிரம் கன அடிக்கும் மேல் அதிகரித்து, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 115 அடியை எட்டியது. மேட்டூர் அணையின் மொத்த உயரமான 120 அடியை இன்னும் ஓரிரு நாள்களில் எட்டி விடும். இந்நிலையில்தான் டெல்டா மாவட்டங்களின் குறுவை சாகுபடிக்காக, முன்கூட்டியே மேட்டூர் அணையை முதல்வர் ஸ்டாலின் திறந்துள்ளார்.


மேட்டூர் அணை திறக்கப்படுவது டெல்டா விவசாயிகளை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதன் மூலம் இந்த ஆண்டு குறுவை சாகுபடி உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. குறுவை சாகுபடிக்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளில் விவசாயிகள் மிகுந்த நம்பிக்கையோடு மும்முரமாக ஈடுபடுவார்கள். மேட்டூர் அணையில் நீர் இருப்பு அதிகமாக உள்ளதாலும், முன்கூட்டியே திறக்கப்படுவதாலும் சாகுபடி பரப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது.

தண்ணீர் பற்றாக்குறை இல்லாமல் பாசனம் செய்தால், நெற்பயிர்கள் வெற்றிகரமாக விளைந்து, கூடுதல் மகசூல் கிடைக்கவும் வாய்ப்புள்ளது. முன்கூட்டியே குறுவை சாகுபடியை தொடங்குவதால், ஐப்பசி மாத அடைமழைக்கு முன்பாகவே குறுவை நெற்பயிர்கள் அறுவடைக்கு வந்துவிடும். இதனால் பயிர்கள் கனமழையில் பாதிக்கப்படுவது தவிர்க்கப்படும். மேட்டூர் அணை முன்கூட்டியே திறக்கப்படுவதால் இப்படி சில முக்கியமான நன்மைகள் இருந்தாலும் கூட, சில பின்னடைவுகள் உள்ளன.

காவிரி டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணி இன்னும் முழுமையாக நிறைவடையவில்லை. தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் 4,649 கிலோ மீட்டர் தூரத்திற்கு, சிறப்பு தூர்வாரும் பணிகள் ரூ 80 கோடி மதிப்பீட்டில், கடந்த மே.23ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் மட்டும் 1,356.44 கிலோ மீட்டர் தூரத்திற்கு 170 பணிகள், ரூ 21 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது.


இந்த பணிகளை வரும் மே 30ஆம் தேதிக்குள் முடிக்க திட்டமிட்டிருந்த நிலையில், மேட்டூர் அணையில் இருந்து, எதிர்பாராத வகையில் முன்கூட்டியே தண்ணீர் திறந்து விடப்பட்டதால் பணிகள் முழுமையாக முடிக்கப்படுமா என கேள்வி எழுந்துள்ளது.

மேலும், டெல்டா பகுதி ஆறுகளில் நடைபெறும் கட்டுமான பணிகளால், மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் வீணாகும் அபாயம் உள்ளதாக, விவசாயிகள் கூறுகின்றனர்.

பெரும்பாலான கிராமங்களில் வாய்க்கால்கள் மோசமான நிலையில் புதர்கள் மண்டி, மண் மேடாகி கிடக்கிறது. ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டாலும் வயல்களுக்கு தண்ணீர் வந்து சேராது. முன் கூட்டியே தண்ணீர் திறப்பதால் டெல்டா மாவட்டங்களில் தற்போது நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகள் முழுமையடையாது.

விதை, உரம் உள்ளிட்டவற்றின் தேவை ஒரே நேரத்தில் அதிகரிக்கும்போது, அவை தட்டுப்பாடின்றி வழங்க வேளாண்மைத்துறை, வேளாண் சார்ந்த துறைகள் தற்போது ஆயத்த நிலையில் இருக்கிறார்களா என தெரியவில்லை.

தமிழக அரசு முன்கூட்டியே மழை நிலவரத்தை அறிவியல் பூர்வமாக அறிந்து, மேட்டூர் அணையின் நீர்மட்டத்தை கருத்தில் கொண்டு, மிகவும் முன்னதாகவே மேட்டூர் அணையை திறக்க வேண்டியதிருக்கும் என்பதை முன் கணிப்பு செய்து அதற்கேற்ப தூர்வாரும் பணிகளை துரிதப்படுத்தியிருக்க வேண்டும்.

ஆனால் இதனை செய்ய தவறிவிட்டார்கள்.

கல்லணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் போது, டெல்டா மாவட்டங்களில், காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய்களில், 80 கோடி ரூபாய் செலவில் நடைபெறும் தூர்வாரும் பணிகள், தடுப்பணை கட்டுதல், கரைகளை பலப்படுத்துதல், பாலங்கள் கட்டுமானப் பணிகள் பாதிப்படையும். பணிகள் நடைபெறும் இடங்களில், கரைகள் பலம் இல்லாத சூழலில், உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் வீணாகும் அபாயம் உள்ளது.


கல்லணையில் இருந்து பிரியும் கல்லணை கால்வாய் ஆற்றின் தரைத்தளம் மற்றும் கரையின் பக்கவாட்டுகளில் சிமெண்ட் கான்கிரீட் தளம், தலைப்பு மதகு, குழாய் மதகுகள் சீரமைப்புப் பணிகள் நடக்கின்றன. மதகுகள் பணிகள் பல இடங்களில் துவங்கி பாதியில் உள்ளன.

தஞ்சாவூர்-பட்டுக்கோட்டை சாலையில் கல்லணைக் கால்வாய் கிளை ஆறுகளில், பாலங்கள் கட்டுமானம் பாதியில் உள்ளது. பணிகள் முழுமை பெறாமல் இருப்பதால், கல்லணை கால்வாயில் தண்ணீர் திறந்தால், உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் வீணாகும்.

குறுவை சாகுபடிக்கு தேவையான இடுபொருள்கள், விதை இவற்றை தயார் நிலையில் வைப்பதோடு, வங்கிகளில் பயிர் கிடைப்பதற்கான ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டும். கடந்த குறுவை நெல் சாகுபடிக்கு விவசாயிகள் பயிர் இன்சூரன்ஸ் செய்ய முடியாத நிலைக்கு ஆளானதற்கு அரசின் அலட்சியம் தான் காரணம்.

இந்த ஆண்டும் அதே போன்ற நிலை வராமல் இருக்க எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். கடைமடை வரை அனைத்து கிராமங்களிலும் உள்ள வயல்களுக்கு குறுவை சாகுபடி நிறைவு நிலைக்கு வரும் வரையிலும் தண்ணீர் சென்று சேர்கிறதா என தமிழக அரசு உறுதி செய்து அக்கறையுடன் நடந்துகொள்ள வேண்டும்.

அதிகமாக வரும் தண்ணீரை கொள்ளிடம் ஆற்றில் திறந்து விட்டு, பணிகள் முடிந்த பின், பாசனத்துக்கு தண்ணீரை திறந்தால் நல்லது என்ற கருத்தும் விவசாயிகள் மத்தியில் உள்ளது. இதேபோல் வெண்ணாறு, காவிரி, குடமுருட்டி ஆறுகளில், தடுப்பணை கட்டும் பணிகள் இன்னும் முடிவடையவில்லை.


திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பகுதிகளில் பெய்யும் மழை நீர், கல்லணைக் கால்வாய், வெண்ணாற்றில் கலக்காமல் சைபன் எனப்படும் கீழ் பாலத்தின் வழியாக, காவிரி ஆற்றில் கலக்கும் வகையில் அடப்பன்பள்ளம் கீழ்பாலம் கட்டுமானப் பணிகள் நடக்கின்றன.

இப்பணிகள் எப்போது முடியும் என தெரியவில்லை. மேட்டூரில் இருந்து முன் கூட்டியே தண்ணீர் திறப்பதால், தண்ணீரை எப்படி பயன்படுத்த முடியும் என ஆலோசித்து, அதற்கு ஏற்ப, நீர் மேலாண்மையை அதிகாரிகள், அமைச்சர்கள் கையாள வேண்டும் எனவும் விவசாயிகள் கூறுகின்றனர்.

தூர்வாரும் பணிக்கு போதிய அளவு இயந்திரங்கள் இல்லை. எனவே பணிகள் விரைவாக நடக்க வாய்ப்பில்லை. வழக்கமாக ஜூன் மாதம் 12ஆம் தேதி தண்ணீர் திறக்கும் நிலையில், சில வாரங்களுக்கு முன்பாகவே தூர்வாரும் பணிகளை முடிப்பது என்பது எந்த அளவு சாத்தியம் என்பது தெரியவில்லை.

Tags

Next Story