சேகர்பாபு அல்ல "செயல்பாபு" முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு
கோப்பு படம்
திருக்கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகள் மாத வருவாயின்றிப் பணியாற்றி வந்தது தெரியவந்தது. அதன்படிக் கடந்த 4.9.2021 அன்று இந்து சமய அறநிலையத்துறையின் மானியக் கோரிக்கையின்போது ஒருகாலப் பூஜை திட்டத்தின்கீழ் உள்ள 12,959 திருக்கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்களுக்கு மாத ஊக்கத் தொகையாக ரூபாய் 1,000/- வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்த அறிவிப்பினைச் செயல்படுத்தும் விதமாகச் சென்னை, திருவான்மியூர் அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோயில் திருமண மண்டபத்தில் இன்று மாத ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து, பேசியதாவது:
இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் அவர்கள் இந்த நிகழ்ச்சியைச் சிறப்பாக ஏற்பாடு செய்து, இந்த நிகழ்ச்சியில் நானும் கலந்து கொள்ளும் ஒரு அரிய வாய்ப்பை எனக்கு வழங்கி, அதன் மூலமாக உங்கள் அனைவரையும் சந்திப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
நம்முடைய அறநிலையத் துறை அமைச்சராக இருக்கக் கூடிய அருமை சகோதரர் சேகர்பாபு அவர்கள் இந்த அறநிலையத் துறையினுடைய பொறுப்பை ஏற்றுக் கொண்டு அவர் எப்படி எல்லாம் பணியாற்றிக் கொண்டு இருக்கிறார் என்பது உங்கள் அனைவருக்கும் நன்றாகத் தெரியும் உள்ளபடியே அவரை சேகர்பாபு என்று அழைப்பதைவிட "செயல்பாபு" என்றுதான் அழைக்க வேண்டும் என்று நான் கருதிக் கொண்டு இருக்கிறேன். அந்தப் பெயருக்கு முழுத் தகுதி படைத்தவராக அவர் விளங்கிக் கொண்டு இருக்கிறார் அதற்கு இந்த நிகழ்ச்சியே சான்றாக அமைந்து இருக்கிறது.
சட்டமன்றத்தில் திட்டத்தை அறிவித்து ஒரு வாரம்தான் ஆகிறது. இன்னும் சட்டமன்றமே முடியவில்லை. 13ஆம் தேதிதான் முடிவடைகிறது. சட்டமன்றத்தில் அறிவித்து ஒரு வாரம் ஆவதற்கு முன்னாலேயே இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தியவர் சேகர்பாபு அவர்கள்தான்.
நாம் அடிக்கடிச் சொல்வோம், எள் என்றால் எண்ணெய் ஆக நிற்பார்" என்று சேகர்பாபு அவர்களைப் பொறுத்தவரையில் எள் என்று சொல்வதற்கு முன்னாலேயே எண்ணெய் ஆக நிற்கக் கூடியவர் நமது அருமை நண்பர் சேகர்பாபு அவர்கள்!
இங்கே அமைச்சர்கள் வேலு, மா.சுப்பிரமணியன் இருக்கின்றார். அவர்கள் தப்பாக நினைக்க மாட்டார்கள் நான் உரிமையோடு சொல்கிறேன் உண்மையில் சொல்ல வேண்டுமானால், இந்து சமய அறநிலையத் துறை கொடுத்து வைத்தத் துறையாக சேகர்பாபு அவர்களால் மாற்றப்பட்டு இருக்கிறது. 24 மணி நேரமும் செயல்படக் கூடிய அமைச்சராக நம்முடைய சேகர்பாபு அவர்கள் விளங்கிக் கொண்டு இருக்கிறார்கள். தொலைகாட்சியில் பார்க்கிறீர்கள், பத்திரிகைகளில் நீங்கள் பார்க்கிறீர்கள்
கோவில் நிலங்கள் மீட்கப்படுகின்றன, கோவில் சொத்துக்களும் மீட்கப்படுகின்றன. அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று சட்டம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. தமிழில் வழிபாடு செய்யப்படக்கூடிய ஒரு அற்புதம் இந்தத் துறையின் மூலமாக நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. இறைவனைப் போற்றும் போற்றிப் பாடல் புத்தகங்கள் வெளியாகி உள்ளது.
அர்ச்சகர்களுக்கு நான்காயிரம் ரூபாய் நிதி தரப்பட்டுள்ளது. பதினைந்து வகையான பொருட்கள் தரப்பட்டுள்ளது. இன்னும் ஒரு அற்புதத்தை நான் சொல்லியாக வேண்டும். இந்தச் சட்டமன்ற கூட்டத் தொடரில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு ஒவ்வொரு
துறையினுடைய மானியக் கோரிக்கை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, விவாதம் நடந்து, அவை எல்லாம் நிறைவேற்றப்பட்டுக் கொண்டு இருக்கிறது, தாக்கல் செய்யப்பட்டுக் கொண்டு இருக்கிறது ஒவ்வொரு துறையின் சார்பில் ஒவ்வொரு அமைச்சர்களும், அவரவர்களுடைய துறையின் சார்பில் என்ன செய்யப் போகிறோம் என்பதை அறிவிப்புகளாக வெளியிடுவது வழக்கம்.
அந்த வகையில் அறநிலையத் துறையின் சார்பில் நம்முடைய சேகர்பாபு இந்து சமய அறநிலையத் துறை மானியக் கோரிக்கை விவாதத்தில், பதிலளித்துப் பேசி அதற்குப் பிறகு அறிவிப்புகளை வெளியிட்டார். எவ்வளவு அறிவிப்புகள் என்று கேட்டீர்களானால், இதுவரை யாரும் செய்யாத சட்டமன்றத்திலே இதுவரை இல்லாத வகையில் 120 அறிவிப்புகளை நம்முடைய சேகர்பாபு அவர்கள் சட்டமன்றத்தில் அறிவித்தார். இது ஒரு பெரிய சாதனை. என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபுவை பாராட்டி பேசினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu