மின்கட்டணத்தை தொடர்ந்து மற்ற கட்டணங்களும் உயர்வு: 'ஷாக்' கொடுக்கும் மின்வாரியம்

மின்கட்டணத்தை தொடர்ந்து மற்ற கட்டணங்களும்  உயர்வு: ஷாக் கொடுக்கும் மின்வாரியம்
X
மின்கட்டண உயர்வைத் தொடர்ந்து, புதிய மின் இணைப்பு பெறுவது மற்றும் சேவைக் கட்டணங்களும் உயர்த்தப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

தமிழகத்தில் கடந்த 10-ம் தேதி முதல் புதிய மின்கட்டண உயர்வு அமலுக்கு வந்தது. இந்த மின்கட்டண உயர்வே பொதுமக்களுக்கு மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், தற்போது மின் இணைப்பு பெறுதல் மற்றும் சேவை கட்டணங்களும் உயர்த்தப்பட்டிருக்கிறது.

அதாவது புதிய இணைப்புக் கட்டணம், மீட்டர் காப்பீடு கட்டணம், வளர்ச்சி கட்டணம், பதிவு கட்டணம் ஆகியவையும் அதிகரித்திருக்கிறது. மின்கம்பங்கள் மூலமாகவோ, தரைக்கு அடியில் கேபிள் மூலமாகவோ அந்தந்த பகுதிகளுக்கு ஏற்ப இந்த கட்டணங்கள் இருமடங்காக உயர்ந்திருக்கிறது.

அதன்படி, மின்கம்பங்கள் மூலமாக மின்சாரம் விநியோகிக்கப்படும் பகுதிகளில் மீட்டர் காப்பீடு கட்டணம் ரூ.600-ல் இருந்து 750 ரூபாயாகவும், இணைப்பு கட்டணம் ரூ.500-ல் இருந்து ரூ.1,000 ஆகவும், பதிவுக் கட்டணம் ரூ.100-ல் இருந்து ரூ.200ஆகவும், வளர்ச்சிக் கட்டணம் ரூ.1,400-ல் இருந்து ரூ.2,800 ஆகவும் , வைப்புத்தொகை ரூ.200-ல் இருந்து ரூ.300 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

இதேபோல், பூமிக்கு அடியில் கேபிள் வழியாக மின்விநியோகம் செய்ய ஒருமுனை மின் இணைப்புக்கான பதிவுக் கட்டணம் ரூ.100 லிருந்து 200 ரூபாயாகவும், வளர்ச்சிக் கட்டணம் ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.7 ஆயிரமாகவும், இணைப்புக் கட்டணம் ரூ.500-ல் இருந்து 1,000 ரூபாயாகவும், மீட்டர் காப்பீடு கட்டணம் ரூ.600-ல் இருந்து ரூ.750ஆகவும் , வைப்புத்தொகை ரூ.200-ல் இருந்து ரூ.300 ஆகவும் உயர்த்தப்பட்டிருக்கிறது.

அத்துடன் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தியதும் ஒருமுனை மின் இணைப்புக்கு மீட்டர் வைப்புத் தொகையாக 5,200 ரூபாயும், மும்முனை மின்இணைப்புக்கு கூடுதலாக ரூ.7,100-ம் வசூலிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.


வீட்டு மின்இணைப்பு பெயர் மாற்றம் செய்ய ரூ.300-லிருந்து ரூ.600 ஆகவும், பழுதடைந்த மீட்டரை மாற்றுவதற்கு, ஒருமுனை மின்இணைப்புக்கு ரூ.500-லிருந்து 1000 ரூபாயாகவும், மும்முனை மின்இணைப்புக்கு ரூ.750-ல் இருந்து ரூ.1,500 ஆகவும் சேவைக்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

அதேபோல் ஒருமுனை மின்இணைப்பு மீட்டரை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு மாற்ற ரூ.500-ல் இருந்து ரூ.1,000 ஆகவும், மும்முனை இணைப்புக்கு ரூ.750-ல் இருந்து ரூ.1,500 ஆகவும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!