தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்கத்தின் வைர விழா மாநாடு ஒத்திவைப்பு
தென் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத கன மழையின் காரணமாக நிவாரண பணிகளை மேற்கொள்ளும் பொருட்டு தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் வைரவிழா ஆண்டு மாநில மாநாடு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் அறுபதாம் ஆண்டு வைரவிழா மாநில மாநாட்டினை எதிர்வரும் 23 -12 -2023 அன்று சென்னையில் நடத்திட திட்டமிடப்பட்டு அதற்கான பூர்வாங்க பணிகள் அனைத்தும் 95% நிறைவடைந்திருந்த நிலையில் தென் தமிழகத்தில் வரலாறு காணாத மழையின் காரணமாக மிகப்பெரிய அளவில் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டு தகவல் தொடர்பு மற்றும் தரைவழிப் போக்குவரத்து அனைத்தும் துண்டிக்கப்பட்டுள்ளதோடு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது.
வெள்ள பாதிப்பு பகுதிகளில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அலுவலர்கள் இரவு பகல் பாராமல் நிவாரண பணிகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பெரு மழையினால் பாதிக்கப்பட்டுள்ள நான்கு மாவட்டங்களுக்கு தேவையான நிவாரண பொருட்களை அனுப்பி வைத்திடும் பணியில் பிற மாவட்டங்களைச் சேர்ந்த வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அலுவலர்கள் முழுமையாக ஈடுபட்டு வருகின்றனர். எனவே குறித்த தேதியில் மாநாட்டினை நடத்துவது தொடர்பாக இன்று அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகளுடன் காணொளி காட்சி வாயிலாக ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.
இந்த கூட்டத்தில் 38 மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட நிர்வாகிகள் தெரிவித்த ஒருமித்த கருத்துக்களின் அடிப்படையிலும் தென் மாவட்டங்களில் வரலாறு காணாத பெருமழையினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரிசெய்தல் மற்றும் நிவாரணம் வழங்குதல் உள்ளிட்ட தொடர்ச்சியான அத்தியாவசிய பணிகளில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அலுவலர்கள் பெருமளவில் ஈடுபட்டுள்ளதை கருத்தில் கொண்டும் பொதுமக்களின் நலன் மற்றும் நிர்வாக நலன் ஆகியவற்றை கருத்தில் கொண்டும் எதிர்வரும் 22 -12 -2023 மற்றும் 23 -12 -2023 ஆகிய தினங்களில் சென்னையில் நடைபெற இருந்த தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் 60 ஆம் ஆண்டு வைரவிழா மாநில மாநாடு தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
இந்த தகவலை சங்கத்தின் மாநிலத் தலைவர் முருகையன், பொதுச்செயலாளர் சங்கரலிங்கம்ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu