காளி ஆவணப்படத்தை தடைசெய்ய தமிழக அரசுக்கு பொன்னுசாமி கோரிக்கை..!
தமிழ்நாடு பால் முகவர்கள், தொழிலாளர்கள் நலச்சங்க நிறுவனத்தலைவர் பொன்னுசாமி.
உலகம் முழுவதும் இந்துக்கள் இடையே கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள காளி ஆவணப்பட போஸ்டர் குறித்து தமிழ்நாடு பால் முகவர்கள், தொழிலாளர்கள் நலச் சங்க நிறுவனத் தலைவர் பொன்னுசாமி அளித்த பேட்டி: கடந்த சில தினங்களுக்கு முன் வெளியிடப்பட்டுள் "காளி" ஆவணப்படத்தின் "பர்ஸ்ட் லுக்" போஸ்டரில் காளிதேவி புகை பிடிப்பது போல காட்சிபடுத்தப்பட்டுள்ளது. இந்த படத்தின் இயக்குனர் லீனா மணிமேகலைக்கு கடும் கண்டனத்தை தெரியப்படுத்துகிறேன்.
மதங்களை கடந்து அனைத்து மத மக்களும் தமிழகத்தில் ஒற்றுமையுடன் வாழ்ந்து வரும் சூழல் நிலவுகிறது. இதுபோன்ற படைப்புகள் இந்துக்கள் மனதில் வெறுப்புணர்வை தூண்டி மத மோதல்கள் நடைபெறும் நிலையை உருவாக்கி விடும். ஏற்கனவே பா.ஜ. கவின் செய்தி தொடர்பாளராக இருந்த நுபுர்சர்மா சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் வடமாநிலங்களில் மிகப்பெரிய அளவில் மத மோதல்கள் நடைபெற காரணமாக அமைந்தது.
தற்போது அதுபோல "படைப்பு, கருத்து சுதந்திரம்" என்கிற பெயரில் திரைப்படங்கள் மூலம் சர்ச்சைக்குரிய காட்சிகளை அமைத்து மத மோதல்களை தூண்டி விடும் சூழல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டிருக்கும் லீனா மணிமேகலை மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அத்துடன் அவர் இயக்கியுள்ள காளி ஆவணப்படத்தை வெளியிடவும் தமிழக அரசு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு, தமிழ்நாடு பால் முகவர்கள், தொழிலாளர்கள் நலச்சங்க நிறுவனத்தலைவர் பொன்னுசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu