அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ. 1000 பொங்கல் பரிசு.. தமிழக அரசு அறிவிப்பு...
முதல்வர் ஸ்டாலின். (கோப்பு படம்).
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கடந்த ஆண்டு பச்சரிசி, வெல்லம் உள்ளிட்ட 21 வகையான பொருட்கள் வழங்கப்பட்டது. இந்த நிலையில், பொருட்களுடன் ரொக்கப் பணம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ரூ. 3 ஆயிரம் வரை வழங்க வேண்டும் என எதிர்கட்சிகள் வலியுறுத்தி வந்தன.
இந்த நிலையில், அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு ரூ. 1000 ரொக்கத்துடன் ஒரு கிலோ பச்சரிசி மற்றும் சர்க்கரை வழங்கிட தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு விவரம் வருமாறு:
2023 ஆம் ஆண்டு தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டது.
அதன்படி, 2023 ஆம் ஆண்டு தைப் பொங்கலை முன்னிட்டு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ரூ.1000 வழங்கிட முடிவு செய்யப்பட்டது.
இதனால் 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள். இதன்மூலம் அரசுக்குச் சுமார் ரூ. 2,356.67 கோடி செலவினம் ஏற்படும். தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்வை 2.1.2023 அன்று சென்னையிலும், அன்றைய தினமே மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட அமைச்சர்களும் தொடங்கி வைப்பார்கள் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu