சென்னையில் நாளை காணும் பொங்கல் கொண்டாட்டத்திற்கு போலீஸ் கட்டுப்பாடுகள்

சென்னையில் நாளை காணும் பொங்கல் கொண்டாட்டத்திற்கு போலீஸ் கட்டுப்பாடுகள்

காணும் பொங்கல் கொண்டாட்டத்தில் சென்னை மாநகர மக்கள் (கோப்பு படம்).

சென்னையில் நாளை காணும் பொங்கல் கொண்டாட்டத்திற்கு போலீஸ் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது.

நாளை காணும் பொங்கல் தினத்தையொட்டி சென்னை மெரினா மற்றும் எலியட்ஸ் கடற்கரைகளில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து சென்னை பெருநகர மாநகர போலீசார் விளக்கம் அளித்தனர். போலீசார் அளித்த விவரங்களை இனி பார்க்கலாம்.

காணும் பொங்கல் நாளை கொண்டாடப்படுகிறது. காணும் பொங்கல் தினத்தன்று மக்கள் சுற்றுலா தலங்களுக்கு அதிக அளவில் வருவார்கள் என்று எதிபார்க்கப்படுவதால் பாதுகாப்பு முன்னேற்பாடுகளை சென்னை காவல்துறை மேற்கொண்டுள்ளது. சென்னை மெரினா கடற்கரையில் நாளை மக்கள் கூட்டம் அதிக அளவில் இருக்கும் என்பதால் கடலுக்கு மக்கள் செல்லாதவாறு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. போலீசாரும் தீவிர ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

இந்த நிலையில், நாளை போலீஸ் தரப்பில் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு முன்னேற்பாடுகள் மற்றும் பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் உள்ளிட்டவை குறித்து போலீஸ் அதிகாரிகள் இன்று விளக்கம் அளித்தனர்.

இது தொடர்பாக போலீசார் கூறியதாவது:-

நாளைக்கு முக்கியமான இடங்களில் குறிப்பாக மெரினா கடற்கரை, எலியட்ஸ் கடற்கரை, தீவுத்திடல் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் அதிகம் வர வாய்ப்புள்ளது. மெரினா கடற்கரை மற்றும் எலியட்ஸ் கடற்கரை போன்ற முக்கியமான கடற்கரைகளில் மணல் பகுதிகளுக்கு மக்கள் வரலாம். மக்கள் கடலுக்கு செல்லாதவாறு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. 17 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். அதுமட்டும் இன்றி முக்கியமான பணிகளான காணாமல் போகும் குழந்தைகளை கண்டுபிடிக்கவும் குற்றங்களை தடுக்கவும் சிறப்பு டீம் போட்டுள்ளோம்.

சிறப்பு கட்டுப்பாடு அறை அமைக்கப்பட்டுள்ளது. காணாமல் போன குழந்தைகள் பற்றி தகவல் தெரிவிக்க மெரினா கடற்கரை, எலியட்ஸ் கடற்கரை உள்ளிட்ட இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் 100-க்கு அழைக்கலாம். அல்லது இந்த மையங்களை அணுகலாம். அது மட்டும் இன்றி புது டெக்னாலஜி கருவிகளை பயன்படுத்துகிறோம். டிரோன் கருவி, முகம் அடையாள கேமரா ஆகியவற்றை பயன்படுத்துகிறோம்.

12 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. காமராஜர் சாலை, சர்வீஸ் சாலைகளில் கூடுதல் ரோந்து பணிகள் நடைபெறும். மெரினா பகுதியில் பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். யாரும் கடல் பகுதிக்கு செல்லக் கூடாது. போலீசார் தடுப்புகள் அமைத்து இருந்தாலும் மக்களின் ஒத்துழைப்பு அவசியம். மக்கள் தங்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். போக்குவரத்து தொடர்பாகவும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

போக்குவரத்து நெரிசல் அதிகம் இருக்கும் இடமான காமராஜர் சாலை, பெசண்ட் நகர், எல்.பி. ரோடு, ஈசிஆர் ஆகிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும். நாங்கள் மக்களிடம் கேட்பது ஒன்றே ஒன்றுதான். பார்க்கிங் கொடுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே வாகனங்களை பார்க் செய்துவிட்டு செல்ல வேண்டும். மெயின் ரோட்டில் பார்க் செய்து விட்டு சென்றால் அது மற்றவர்களுக்கு பயணம் செய்ய ஒரு இக்கட்டாக இருக்கும்.

மெரினாவில் மட்டுமே போக்குவரத்து மாற்றம் செய்யபட்டுள்ளது. வட சென்னையில் இருந்து வருபவர்களுக்கு எந்த டைவர்சனும் கிடையாது. நேராக லைட் ஹவுஸ் க்கு போயிட்டே இருக்கலாம். லைட் ஹவுசில் இருந்து போர் நினைவுச்சின்னம் செல்லும் வாகனங்கள் மட்டும் போக்குவரத்து எவ்வளவு நெரிசல் இருக்கிறது என்பதை பொறுத்து மாற்றம் செய்யப்படும். அதிக அளவு போக்குவரத்து இருந்தால் பெல்ஸ் ரோடு சந்திப்பில் டைவர்ஷ் எடுத்து விக்டோரியா சாலை வழியாக திருவல்லிக்கேணி போய் செல்ல வேண்டும்.

கிரிக்கெட் போட்டிகளின் போது கொடுக்கப்படும் மாற்றம் தான். வேறு எங்கேயுமே டைவர்ஷன் இல்லை. 3,618 கேமராக்கள் மூலம் போக்குவரத்து விதி மீறல்கள் கண்காணிக்கப்படும். வீலிங் போன்றவற்றில் ஈடுபட்டால் உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்து விடும். புத்தாண்டை எப்படி விபத்து இல்லாததாக கொண்டாடினாமோ அதேபோல காணும் பொங்கலையும் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத பொங்கலாக கொண்டாட வேண்டும்.

இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

Tags

Next Story