ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு கடும் கட்டுப்பாடு விதித்த காவல்துறை

ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு கடும் கட்டுப்பாடு விதித்த காவல்துறை
X

பைல் படம்.

தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு காவல்துறை கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு ஐகோர்ட்டு அளித்திருந்த அனுமதிக்கு எதிராக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனு நேற்று முன்தினம் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு அனுமதி அளித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் சென்னை உள்பட 45 இடங்களில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடத்த அந்த அமைப்பினர் முடிவு செய்தனர். இதற்கு போலீசார் அனுமதி அளித்துள்ளனர்.

இதையடுத்து திட்டமிட்டபடி ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடைபெற உள்ளது. சென்னையில் 2 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடைபெறுகிறது. கொரட்டூர் விவேகானந்தா பள்ளி மற்றும் ஊரப்பாக்கம் சங்கராபள்ளி ஆகிய இடங்களில் இருந்து ஊர்வலமாக செல்கிறார்கள். முடிவில் பொதுக்கூட்டமும் நடைபெறுகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இந்த நிலையில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு 12 நிபந்தனைகளை போலீசார் விதித்துள்ளனர்.

இது தொடர்பாக டி.ஜி.பி. சைலேந்திரபாபு அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், கமிஷனர் அலுவலகங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

அதில் கடுமையான நிபந்தனைகள் இடம்பெற்றுள்ளன அதன் விவரம் வருமாறு:-

ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தின் போது தனி நபர்களை குறிப்பிட்டோ சாதி, மதம் பற்றியோ எக்காரணம் கொண்டும் யாரும் தவறாக பேசக் கூடாது.

இந்திய அரசால் தடை செய்யப்பட்ட அமைப்புகளுக்கு ஆதரவாக எந்தவித கருத்துக்களையும் வெளிப்படுத்தி பேசக்கூடாது.

நமது நாட்டின் இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் ஊறுவிளைவிக்கும் எந்த செயலையும் யாரும் செய்யக்கூடாது.

பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தாத வகையில் ஊர்வலம் மற்றும் நிகழ்ச்சியை நடத்த வேண்டும்.

ஊர்வலத்தில் கலந்து கொள்பவர்கள் யாருக்கும் காயம் ஏற்படுத்தக்கூடிய வகையில் கம்பு மற்றும் ஆயுதங்கள் எதையும் கைகளில் ஏந்திச் செல்லக்கூடாது.

ஊர்வலத்துக்கு ஏற்பாடு செய்திருப்பவர்கள் குடிநீர் வசதி, முதல் உதவி, நடமாடும் கழிவறைகள், கேமராக்கள், தீயணைப்பு கருவிகள் போன்றவற்றை ஏற்படுத்திக்கொள்ள போலீசார் மற்றும் உள்ளாட்சி அமைப்பினருடன் கலந்து ஆலோசித்திருக்க வேண்டும்.

அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் இடதுபுறமாக மட்டுமே ஊர்வலமாக செல்ல வேண்டும். அனுமதிக்கப்பட்ட சாலையில் நான்கில் ஒரு பகுதியை மட்டுமே ஊர்வலத்துக்காக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஊர்வலத்தை நடத்தும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும், ஊர்வலத்தில் செல்பவர்களை ஒழுங்குப்படுத்தவும் போலீசுக்கு உதவும் வகையில் போதுமான தன்னார்வலர்களை நியமித்திருக்க வேண்டும்.

போலீஸ் அனுமதி அளித்துள்ள வழித்தடத்தில் மட்டுமே ஊர்வலமாக செல்வதை ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

பெட்டி வடிவிலான ஒலி பெருக்கிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

ஒலி சத்தம் 15 வாட்சுகளுக்கு மிகாமல் இருப்பது அவசியம். கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளை எக்காரணம் கொண்டும் பயன்படுத்தக்கூடாது.

ஊர்வலத்தில் செல்பவர்கள் மதம், மொழி, கலாச்சாரம் மற்றும் பிற குழுக்களின் உணர்வுகளை எந்த வகையிலும் புண்படுத்தும் வகையில் நடந்து கொள்ளக்கூடாது.

பொதுச்சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டால் அதனை ஏற்கும் வகையில் ஊர்வல ஏற்பாட்டாளர்கள் உறுதி மொழி அளிக்க வேண்டும்.

இந்த நிபந்தனைகள் எதையும் ஊர்வலத்தில் செல்பவர்கள் எக்காரணம் கொண்டும் மீறக்கூடாது. அப்படி மீறும் வகையில் செயல்பட்டால் தேவையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இவ்வாறு போலீசார் கடுமையான கட்டுப்பாடுகளை ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு விதித்துள்ளனர்.

காவல் துறை அலுவலகம் சார்பில் அனுப்பப்பட்டுள்ள இந்த சுற்றிக்கையில் சென்னை ஐகோர்ட்டு விதித்துள்ள உத்தரவின் படியே மேற்கண்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!