காவல்துறையினருக்கு காவல் ஆணையர் அருண் அதிரடி உத்தரவு

காவல்துறையினருக்கு காவல் ஆணையர் அருண் அதிரடி உத்தரவு
X

சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் 

காலை 7 முதல் 10 வரை, மாலை 5 முதல் 8 மணி வரை சாலைகளில் தான் நிற்க வேண்டும் என காவல் ஆணையர் அருண் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்

சென்னையில் காலை மற்றும் மாலை நேரங்களில் சாலைகளில்தான் காவலர்கள் நிற்க வேண்டும். காவல் நிலையத்தில் இருக்கக் கூடாது என்று போலீசாருக்கு புதிய காவல் ஆணையர் அருண் அதிரடிஉத்தரவு,பிறப்பித்துள்ளார்.

சென்னையில் பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் நெல்லை, தூத்துக்குடி மாவட்ட கூலிப்படையினருக்கு தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், போலீஸ் கமிஷனராக இருந்த சந்தீப் ராய் ரத்தோர் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டார்.

புதிய போலீஸ் கமிஷனராக அருண் நியமிக்கப்பட்டார். அவர் பதவி ஏற்றவுடன், ரவுடிகளுக்கு புரியும் மொழியில் சொல்லிக் கொடுக்கப்படும் என்றார். ரவுடிகளை வேட்டையாடுவதில் கில்லாடியான அருண், தமிழக சட்டம் -ஒழுங்கு ஏடிஜிபியாக இருந்தபோது மாவட்ட வாரியாக ரவுடிகளையும், கூலிப்படைகளையும் கைது செய்து, அவர்களுக்கு சிறப்பு கவனிப்பு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதனால் பல ரவுடிகள் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கும், வெளி மாநிலங்களுக்கும் ஓட்டம் பிடித்தனர்.

தற்போது, சென்னை போலீஸ் கமிஷனராக அருண் நியமிக்கப்பட்டவுடன், ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதோடு, கூடுதல் கமிஷனர்கள், இணை கமிஷனர்கள், துணை கமிஷனர்களுடன் அவர் அவசர ஆலோசனை நடத்தினார். அப்போது, காவல்துறையினருக்கு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். அதில், காலையில் 7 மணி முதல் 10 மணி வரையும், மாலையில் 5 மணி முதல் 8 மணி வரையும் காவலர்கள் முதல் இணை ஆணையர்கள் வரை அனைவரும் சாலையில்தான் நிற்க வேண்டும் அல்லது ரோந்து செல்ல வேண்டும்.

காவலர்கள் முதல் காவல் ஆய்வாளர்வரை உள்ளவர்கள் காவல் நிலையத்திலோ, உதவி ஆணையர்கள் முதல் இணை ஆணையர்கள் வரை உள்ளவர்கள் அலுவலகத்திலோ இருக்கக் கூடாது. அவ்வாறு இந்த நேரங்களில் காவல்நிலையத்தில் இருப்பது தெரிந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். காவல்நிலையத்தில் ரைட்டர் மற்றும் வரவேற்பாளர், பாரா காவலர் மட்டுமே இருக்க வேண்டும்.

புகார்கள் வந்தால், ரைட்டர் அதை விசாரித்து, ரோந்து பணி அல்லது சாலையில் பாதுகாப்பு பணியில் உள்ள உதவி காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கு சொல்ல வேண்டும். அவர்கள் சம்பவ பகுதிக்குச் சென்று நேரடியாக விசாரணை நடத்த வேண்டும். யாரும் காவல்நிலையத்தில் ஆய்வாளர் அறையில் அமர்ந்து விசாரணை நடத்தக் கூடாது.

ரோந்துப் பணி நேரம் தவிர மற்ற நேரங்களில் காவல்நிலையத்தில் வெளியே வராண்டாவிலோ வாசல் அருகிலோ மேஜை, நாற்காலிகளைப் போட்டு, வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும். நியாயமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். நீங்கள் நியாயமாக விசாரிப்பது காவல் நிலையங்களுக்கு வருபவர்களுக்கோ, சாலையில் செல்பவர்களுக்கோ தெரிய வேண்டும். குற்றவாளிகள் சிறையில் இருந்து வெளியில் வந்திருப்பது தெரிந்தால், அவர்களின் வீடுகளுக்கு வாரம் ஒருமுறையாவது சென்று விசாரிக்க வேண்டும். அவர்களது வீடுகளில் சோதனையிட வேண்டும். அவர்கள் மீண்டும் குற்றச் சம்பவங்களில் ஈடுபடாமல் தடுப்பது காவல்துறையினரின் கடமை. ஒரு இடத்தில் குற்றச்சம்பவங்கள் நடந்தால், மறுநாள் அந்த பகுதி காவல்துறையினர் அனைவரும் ஆணையர் அலுவலகத்தில் ஆஜராக வேண்டியது வரும்.

இதுபோன்ற நிலை வராமல் பார்த்துக் கொள்வது காவல்துறையினர் கடமை. இரவு ரோந்துப் பணியில் சுணக்கம் இருக்கக் கூடாது. கடமைக்கு ரோந்து செல்லக்கூடாது. இரவுப்பணியில் இருக்கும் காவலர்கள் தலைமறைவு குற்றவாளிகள், நீதிமன்றத்தில் வாரன்ட் பிறப்பிக்கப்பட்டவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் இறங்க வேண்டும். மாலையில் தலைமறைவு குற்றவாளிகளின் பட்டியல் இரவு பணி போலீசாருக்கு வழங்கப்படும். இரவு ரோந்துப் பணிகளை இணை ஆணையர்கள் கண்காணிக்க வேண்டும். இரவு மற்றும் காலை நேரங்களில் போலீசார் இரவில் என்ன பணி செய்தார்கள், எவ்வளவு குற்றவாளிகளை இரவில் கைது செய்தார்கள் என்பதை ஆணையருக்கு தெரியப்படுத்த வேண்டும்.

இந்த பணிகளை தொய்வு இல்லாமல் போலீசார் முதல் அதிகாரிகள் வரை செய்ய வேண்டும். பணி செய்ய தவறுகிறவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் ஆணையர் அருண் எச்சரித்துள்ளார்

புதிய ஆணையர்அருணின் உத்தரவை தொடர்ந்து காலை, மாலை நேரங்களில் காவலர்களையும், அதிகாரிகளையும் தற்போது சாலைகளில் அதிகமாக பார்க்க முடிகிறது. குற்றங்களும் குறைந்துள்ளது என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.

Tags

Next Story
இன்ஸ்டாகிராம் முடக்கம் !!! பயனர்கள் அதிர்ச்சி !! அதிகரிக்கின்றது புகார்கள் !!! | why does instagram hang up by itself