யூடியூபர் டிடிஎப் வாசன் கைது, லைசென்ஸ் ரத்து : காவல்துறை அதிரடி

யூடியூபர் டிடிஎப் வாசன் கைது, லைசென்ஸ் ரத்து : காவல்துறை அதிரடி
X

யூடியூபர் டிடிஎப் வாசன் 

டிடிஎஃப் வாசன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்.

இந்தியாவில் தற்போதைய இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் யூடியூபர் டிடிஎஃப் வாசன். இவர் இந்தியா முழுவதும் தனது பைக்குகளில் டூர் சென்று அதை வீடியோ எடுத்து யூடியூபில் வெளியிட்டு வருகிறார். இவரது வீடியோவை ஏராளமான இளைஞர்கள் பார்த்து வருகின்றனர். இவருக்கென்று தமிழகத்தில் மிகப்பெரிய ரசிகர் படையே இருக்கிறது.

இவர் கடந்த ஏப்ரல் மாசம் சுஸூகி நிறுவனத்தின் ஹயபுஸா என்ற புதிய பைக் ஒன்றை வாங்கினார். இந்த பைக்கின் விலை ரூபாய் 17 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இந்த பைக்கை வாங்கியது முதல் அதை இவர் ஓட்டிச் செல்வது என பல்வேறு இடங்களில் இந்த பைக்கை பயன்படுத்தி அவர் வீடியோ வெளியிட்டு வந்துள்ளார்.

இதனிடையே டிடிஎப் வாசன், நேற்று முன் தினம் விலை உயர்ந்த தனது பைக்கில் சென்னையில் இருந்து மராட்டிய மாநிலத்துக்கு புறப்பட்டு சென்றார். சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வேலூர் நோக்கி சென்று கொண்டிருந்தபோது, காஞ்சீபுரம் அடுத்த பாலுசெட்டிசத்திரம் பகுதியில் அதிவேகமாக சென்ற அவர், முன்னால் சென்ற காரை முந்திச்செல்ல முயன்று தனது பைக்கில் 'வீலீங்' செய்தார்.

அப்போது கட்டுப்பாட்டை இழந்த பைக் சாலையோர தடுப்பில் மோதியது. இதில் டிடிஎப் வாசன் பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த டிடிஎப் வாசனை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு காஞ்சிபுரம் அருகில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்ட போதிலும் அவர் பாதுகாப்பு கவச உடை அணிந்திருந்ததால் உயிர் தப்பினார். எனினும் அவருக்கு கை பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அதற்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட காஞ்சிபுரம் பாலுசெட்டி சத்திரம் காவல்துறையினர், டிடிஎப் வாசன் மீது வாகனத்தை அஜாக்கிரதையாக ஓட்டுதல், பிறர் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவித்தல் உள்பட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும், டிடிஎப் வாசன் வாசனின் ஓட்டுநர் உரிமத்தையும் ரத்து செய்ய தமிழ்நாடு போக்குவரத்து துறைக்கு பரிந்துரை செய்தனர். இதனை தொடர்ந்து டிடிஎப் வாசனின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய தமிழ்நாடு போக்குவரத்து துறை ஆணையரகம் பரிந்துரை செய்துள்ளது. இந்நிலையில், பைக்கில் வீலிங் செய்து விபத்தில் சிக்கிய டிடிஎப் வாசனை காஞ்சிபுரம் காவல்துறையினர் இன்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட டிடிஎப் வாசனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விபத்தில் மற்றவர்களுக்கு காயம் ஏற்படாமல் டிடிஎஃப் வாசனுக்கு மட்டுமே காயம் ஏற்பட்டதால் அவர் மீது 279 ன் கீழ் மட்டுமே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சாலை விபத்தில் வாகனம் ஓட்டியவரை தவிர மற்றவருக்கு காயம் ஏற்பட்டால் அந்த விபத்தில் வாகனத்தை உணர்த்தி வந்த ஓட்டுநருக்கு 337 338 மற்றும் 340ஏ ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!