Pmk Demand Excess NDRF சென்னைக்கு கூடுதல் தேசிய பேரிடர் மீட்புக் குழுக்களை அனுப்ப பாமக வலியுறுத்தல்
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ். (கோப்பு படம்).
Pmk Demand Excess NDRF
வங்கக்கடலில் உருவாகியுள்ள மிக்ஜம் புயல் வேகமாக கரையை நெருங்கி வரும் நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 12 மணி நேரத்திற்கும் மேலாக பெய்து வரும் தொடர்மழையால் சென்னை வெள்ளக்காடாக மாறி இருக்கிறது.
புறநகர் மாவட்டங்களான திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகியவையும் மிதக்கத் தொடங்கியுள்ளன. பேருந்து போக்குவரத்து முதல் விமானப் போக்குவரத்து வரை அனைத்தும் பாதிக்கப்பட்டிருப்பதிலிருந்தே மழையின் தீவிரத்தை உணர்ந்து கொள்ள முடியும்.
இதுகுறித்து பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:
சென்னையின் பெரும்பான்மையான பகுதிகளில் பல அடி உயரத்திற்கு வெள்ள நீர் தேங்கி நிற்கிறது. அடுக்கு மாடி குடியிருப்புகளுக்குள்ளும் மழை நீர் நுழையத் தொடங்கியுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், பாதிப்புகளை தடுப்பதோ, குறைப்பதோ சாத்தியமல்ல. பல இடங்களில் மரங்கள் சாய்ந்துள்ளன. போக்குவரத்து தடைபட்டிருக்கிறது. அனைத்து பகுதிகளிலும் மழை நீரை வடியச் செய்யும் பணிகளில் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டிருக்கும் போதிலும் நிலைமை அவர்களின் கைகளை மீறிச் சென்று கொண்டிருக்கிறது.
மிக்ஜம் புயல் தீவிர புயலாக மாறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்லூருக்கும் மசூலிப்பட்டினத்திற்கும் இடையே புயல் நாளை கரையை கடக்கும் வரை சென்னையில் மழை மேலும் தீவிரமடையும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. சென்னையின் பல பகுதிகள் இப்போதே அணுக முடியாத அளவுக்கு துண்டிக்கப்பட்டுள்ளன. கொட்டும் மழையிலும் மாநகராட்சிப் பணியாளர்கள் பல்வேறு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டுள்ளனர். அவர்களுக்கு பாராட்டுகள். ஆனால், மழை மற்றும் புயலின் வேகம் கடுமையாக இருப்பதால் நிலைமையை சமாளிக்க முடியவில்லை. இதேநிலை தொடர்ந்தால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நிலையும், பாதிப்புகளும் மேலும் மோசமடையக் கூடும்.
அண்மைக்காலங்களில் கடந்த 2015-ஆம் ஆண்டில் பெய்த மழை தான் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியது. நாளை வரை மழை தொடர்ந்தால் அதை விட மோசமான பாதிப்புகள் ஏற்படக்கூடும். பாதிப்புகளின் தாக்கத்தைக் குறைக்க பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும். வானிலை ஆய்வு மையமும், தமிழக அரசின் பேரிடர் மேலாண்மை மையமும் வழங்கும் அறிவுரைகளை பின்பற்ற வேண்டும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நிலைமை மேலும் மோசமடைந்தால் அதை சமாளிப்பதற்காக தேசிய பேரிடர் மீட்புக் குழுக்களை அதிக அளவில் அனுப்பி வைக்க வேண்டும் என்று மத்திய அரசை கேட்டுக் கொள்கிறேன் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu