பிளஸ்1 தேர்வு விவகாரம்: மத்திய இடைநிலை கல்வி வாரியத்துக்கு ஐகோர்ட் உத்தரவு

பிளஸ்1 தேர்வு விவகாரம்: மத்திய இடைநிலை கல்வி வாரியத்துக்கு ஐகோர்ட் உத்தரவு
X

சென்னை உயர் நீதிமன்றம். (கோப்பு படம்).

பிளஸ் 1 வகுப்பு தேர்வு குறித்து விளக்கம் அளிக்க மத்திய இடைநிலை கல்வி வாரியத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிளஸ் 1 வகுப்பு தேர்வில் ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு துணைத் தேர்வு நடத்த அனுமதி இல்லையா என்பது குறித்து விளக்கம் அளிக்க மத்திய இடைநிலை கல்வி வாரியத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பு தேர்வில் ஒரு பாடத்தில் தோல்வியடைந்தவர்கள், துணைத் தேர்வு எழுத அனுமதிப்பதாகவும், ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வியடைந்தவர்களை துணைத் தேர்வு எழுத அனுமதிப்பதில்லை எனவும் கூறி ஏராளமான மாணவர்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்குகளை விசாரித்த தனி நீதிபதி, மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, தமிழகம் முழுவதும் கேந்திரிய வித்யாலயாவில் பிளஸ் 1 வகுப்பில் ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வியடைந்தவர்களுக்கு ஒருமுறை நடவடிக்கையாக மூன்று வாரங்களில் துணைத்தேர்வு நடத்த வேண்டும் என கேந்திரிய வித்யாலயா சங்கதனுக்கு உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து கேந்திரிய வித்யாலயா சங்கதன் நிர்வாகம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அந்த மேல் முறையீட்டு வழக்கு தலைமை நீதிபதி கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, கல்வி தொடர்பான விவகாரங்களில் நீதிமன்றம் தலையிடக் கூடாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், பிளஸ் 1 வகுப்புக்கு துணைத் தேர்வு நடத்தப்படுகிறதா என்பது குறித்தும், ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வியடைந்தவர்கள் மறுதேர்வு எழுத அனுமதி இல்லையா? என்பது குறித்தும் விளக்கமளிக்கும்படி, மத்திய இடைநிலை கல்வி வாரியத்துக்கு உத்தரவிட்டு, விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.

Tags

Next Story