விசாரணையை தாமதப்படுத்தவே மனு: செந்தில் பாலாஜி மீது குற்றச்சாட்டு

விசாரணையை தாமதப்படுத்தவே மனு: செந்தில் பாலாஜி மீது குற்றச்சாட்டு
X
விசாரணையை தாமதப்படுத்தவே மனு தாக்கல் செய்யப்படுகிறது செந்தில் பாலாஜி மீது அமலாக்க துறை குற்றம் சாட்டி உள்ளது.

சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கின் விசாரணையை தாமதப்படுத்தவே செந்தில் பாலாஜி புதிது புதிதாக மனுக்களை தாக்கல் செய்கிறார் என்று நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது.

சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் எனக் கோரி செந்தில் பாலாஜி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். பின்னர் இந்த வழக்கின் மீதான உத்தரவை தள்ளிவைக்க கோரி செந்தில் பாலாஜி தரப்பில் புதிதாக மூன்று மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த நிலையில், இது தொடர்பான வழக்கு ஒன்று நீதிபதி அல்லி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கின் விசாரணையை தாமதப்படுத்தும் நோக்கில் செந்தில் பாலாஜி தரப்பில் புதிது புதிதாக மனுக்கள் தாக்கல் செய்யப்படுவதாகவும் இந்த மனுக்கள் மீது வாதிட கால அவகாசம் வழங்க கூடாது என்றும் வாதங்களை இன்றே கேட்டு முடிவு செய்ய வேண்டும் என்றும் வாதம் முன்வைக்கப்பட்டது. இதையடுத்து செந்தில் பாலாஜி தரப்பு வாதத்திற்காக ஜூலை 3 ஆம் தேதிக்கு விசாரணையை தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளார்.

அமலாக்கத்துறை பதிவு செய்த சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் எனக்கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை கடந்த 19 ஆம் தேதி தெரிவிப்பதாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

ஆனால், தன்னை விடுவிக்க கோரிய மனு மீதான உத்தரவை தள்ளி வைக்க வேண்டும் எனக் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் மீண்டும் புதிதாக 3 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில், போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்ததாக வழக்கு தொடரப்பட்டு, சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கின் விசாரணை முடியும் வரை, அமலாக்கத்துறை வழக்கின் விசாரணையை தள்ளி வைக்க கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டு விட்டதால் அந்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு வழக்கின் விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ளது.

அதேபோல், வங்கி ஆவணங்களை கேட்டு தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்தும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதால் அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய மனுவின் தீர்ப்பினை தள்ளி வைக்க வேண்டும் என செந்தில் பாலாஜி தரப்பில் கோரப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
scope of ai in future