தமிழகத்தில் 2,300 ஏரிகளை ஆழப்படுத்தி மீட்க திட்டம்: நீதிமன்றத்தில் அரசு தகவல்
சென்னை உயர் நீதிமன்றம். (கோப்பு படம்).
மழைக் காலங்களில் மழை நீர் அண்டை மாநிலங்களுக்கு பாய்வதையும், வீணாக கடலில் கலப்பதையும் தடுக்கும் வகையில், தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் உள்ள ஏரிகள், கால்வாய்களை ஆழப்படுத்தவும், உரிய இடங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி சமூக ஆர்வலர் தேவராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்து இதிருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றி தூய்மைபடுத்த எடுத்த நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த பதில் மனுவில், நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றி பாதுகாப்பது தொடர்பாக உயர் நீதிமன்ற உத்தரவின்படி மண்டல, மாவட்ட மாநில அளவிலான குழுக்களை அமைத்து 2022 பிப்ரவரி மாதம் அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளதாகவும், கடந்த ஜூன் மாத புள்ளிவிவர கணக்கின்படி, 20 ஆயிரத்து 150 ஆக்கிரமிப்புகளை அகற்றி 7 ஆயிரத்து 569 ஏரிகளை ஆக்கிரமிப்புகள் அற்றவையாக பராமரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.
மேலும், கேரளா, ஆந்திரா ஆகியவற்றுடன் நீர் பங்கீடு தொடர்பாக ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும், அவை மீறப்படும்பட்சத்தில் தமிழகத்தின் உரிமைகளை பாதுகாக்க உரிய அமைப்பை நாடிவருவதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
நீர்நிலைகள் பழுதுபார்த்து, புதுப்பித்து மறு சீரமைப்பு திட்டத்தின் கீழ் தமிழகம் முழுதும் 2 ஆயிரத்து 300 ஏரிகளை உலக வங்கி உதவியுடன் ஆழப்படுத்தி பழைய நிலைக்கு மீட்கப்பட உள்ளதாகவும் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அரசு தரப்பு விளக்கத்தை பதிவு செய்த நீதிபதிகள், மனுதாரர் எந்த பகுதியில் தனது கோரிக்கையை நிறைவேற்றக் கோருகிறார் என குறிப்பிட்டு தெரிவிக்காத நிலையில், பொதுவான உத்தரவாக பிறப்பிக்க முடியாது என தெரிவித்ததுடன், ஒருவேளை குறிப்பிட்டு சொல்லும்பட்சத்தில் அது பரிசீலிக்கப்படும் என கூறி, தேவராஜன் தொடர்ந்த வழக்கை முடித்து வைத்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu