நாளை மறியல்... தீவிரமாகிறது அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம்

நாளை மறியல்... தீவிரமாகிறது அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம்
X

அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் இன்று ஆர்ப்பாட்டம் நடத்திய காட்சி.

அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் நாளை மறியல் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து இருப்பதால் அவர்களது போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது.

வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் நாளை மறியல் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர். இதன் காரணமாக அவர்களது போராட்டம் மேலும் தீவிரம் அடைந்து வருகிறது.

தமிழக அரசு போக்குவரத்து கழகங்களில் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இந்த தொழிலாளர்கள் தங்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், புதிய ஓய்வுதத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு ஓய்வூதியத்துடன் அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் ஓய்வூதியர்களிடம் இருந்து பிடித்தம் செய்துள்ள பண பலன்களை தாமதம் இன்றி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தார்கள்.

இந்த போராட்டத்தை தடுத்து நிறுத்துவதற்காக தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தொழிற்சங்க தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இரண்டு முறை நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு எட்டப்படாமல் தோல்வியில் முடிவுற்றது .இதன் காரணமாக அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் குதித்துள்ளனர். அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் ஜனவரி ஒன்பதாம் தேதியிலிருந்து தொடங்கப்படும் என அறிவித்திருந்தாலும் நேற்று மாலையே பெரும்பாலான நகரங்களில் வேலை நிறுத்த போராட்டம் தொடங்கிவிட்டது. குறிப்பாக சென்னையில் நேற்று இரவில் அரசு பஸ்கள் பெரும்பாலானவை இயக்கப்படவில்லை. இந்த நிலையில் இன்று காலையும் அதே நிலைதான்.

அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களின் அண்ணா தொழிற்சங்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொழிற்சங்கத்தின் சி ஐ டி யு ஆகியவை தீவிரமாக களத்தில் உள்ளன. தி.மு.க.வின் தொ.மு.ச. காங்கிரசின் ஐ.என்.டி.யூ.சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஏஐடியுசி தொழிற்சங்க தொழிலாளர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை .

அவர்களை வைத்து அரசாங்கம் பேருந்துகளை இயக்கி வருகிறது. மேலும் தற்காலிக டிரைவர் கண்டக்டர் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர் அவர்களால் பஸ்களை சரியாக இயக்க முடியவில்லை. இதனால் பல இடங்களில் தற்காலிக டிரைவர்களால் இயக்கப்பட்ட பஸ்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன. சில நகரங்களில் கண்டக்டர்கள் இல்லாமல் பஸ்கள் இயங்கின. இதனால் பயணிகளை எங்கே எப்படி இறங்கி செல்ல தெரியாமல் தவித்தனர். பல இடங்களில் பள்ளி மாணவ மாணவிகள் கடும் அவதிப்பட்டனர்.

இப்படி எங்கு பார்த்தாலும் பல பிரச்சினைகளுக்க இடையே அரசு போக்குவரத்து கழக பஸ்கள் இன்று இயங்கின. ஆனால் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தமிழகத்தில் 94 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டதாக அறிவித்துள்ளார். ஒவ்வொரு அரசு போக்குவரத்து கழகத்தின் மேலாண்மை இயக்குனர்களும் அரசு பஸ்கள் எந்தவித பிரச்சனையும் இன்றி இயக்கப்பட்டு வருகிறது என்று கூறியுள்ளனர்.

இந்த நிலையில் சி ஐ டி யு தொழிற்சங்கத்தின் செயலாளர் சௌந்தரராஜன் செய்தியாளர்களிடம் இன்று கூறியதாவது:-

தமிழக அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்கனவே அளித்த வாக்குறுதி படி நிறைவேற்ற வேண்டும். ஆனால் ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் பணத்தை பிடித்து வைத்துக்கொண்டு அவர்களை எட்டு ஆண்டுகளாக ஏமாற்றி வருகிறார்கள். அதற்காகத்தான் இந்த போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. பெரும்பாலான தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அவர்களை ஒடுக்குவதற்காக அரசு அடக்குமுறைகளை கையாண்டு வருகிறது. இந்நிலை நீடிக்க கூடாது.

நாளை தமிழகம் முழுவதும் அனைத்து அரசு போக்குவரத்து கழக பணிமனைகளிலும் தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம் நடத்துவார்கள். பணிக்கு வரும் தொழிலாளர்களை வேலை செய்யவிடாமல் தடுத்து மறியல் போராட்டம் நடத்துவார்கள். சென்னையில் முற்றுகை போராட்டம் நடத்தப்படும். எங்கள் போராட்டம் தொடரும். அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களின் நியாயமான போராட்டம் வெல்லும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இன்று தமிழகம் முழுவதும் பணிமனைகள் முன் தொழிலாளர்கள் தர்ணா போராட்டம் தான் நடத்தினார்கள். ஆனால் நாளை பணிக்கு செல்லும் தொழிலாளர்களை தடுத்து நிறுத்தி மறியல் போராட்டம் நடத்தப்படும் என்பதால் அவர்களது போராட்டம் மேலும் தீவிரமாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!