காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் புகைப்படக் கண்காட்சி
புகைப்படக் கண்காட்சியை துவக்கிவைத்த ஆளுநர்.
சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக தேசத் தந்தை மகாத்மா காந்தி மற்றும் அறியப்படாத பல்வேறு தியாகிகளின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துரைக்கும் புகைப்படக் கண்காட்சியை சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று தமிழ்நாடு ஆளுநர் திரு ஆர்.என் ரவி அவர்கள் தொடங்கி வைத்தார்.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் அறியப்படாத சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக அவர்களுடைய வாழ்க்கைக் குறிப்புகளுடன் புகைப்படங்கள் அடங்கிய கண்காட்சிக்கு மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சென்னை மண்டல மத்திய மக்கள் தொடர்பகம் ஏற்பாடு செய்திருந்தது.
வரும் ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறும் இக்கண்காட்சியை தமிழ்நாடு ஆளுநர் திரு. ஆர்.என்.ரவி திறந்துவைத்து தனது மனைவியுடன் பார்வையிட்டார்.
பின்னர் கண்காட்சி அரங்கில் வைக்கப்பட்டிருந்த காந்தி சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாடிய அவர், அரங்கில் வைக்கப்பட்டிருந்த செல்ஃபி பாய்ண்ட்டில் மாணவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் சென்னை பத்திரிகை தகவல் அலுவலகம் மற்றும் மத்திய மக்கள் தொடர்பகத்தின் கூடுதல் தலைமை இயக்குநர் எம். அண்ணாதுரை, மத்திய மக்கள் தொடர்பகத்தின் இயக்குநர் ஜெ. காமராஜ், மாநில அரசு அதிகாரிகள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.
இந்தியத் திருநாட்டின் சுதந்திரத்தின் 75வது ஆண்டைக் குறிக்கும் வகையில் கொண்டாடப்பட்டு வரும் சுதந்திரத்தின் அமிர்தப் பெருவிழாவின் ஒரு பகுதியாக தமிழ்நாடு ஆளுநரும் பல்கலைக்கழகங்களின் வேந்தருமான திரு ஆர் என் ரவி அவர்கள், அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறித்து ஆய்வு செய்வதற்கான சிறப்பு முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளார். இந்த சிறப்பு முன்முயற்சிக்காக தமிழ்நாடு முழுவதிலுமுள்ள 16 பல்கலைக்கழகங்கள் ஆர்வத்துடன் பங்கெடுத்து, 91 அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்களை இனம் கண்டுள்ளனர். இந்தப் பெரும் முயற்சியில் 85 ஆராய்ச்சியாளர்கள், 60 வழிகாட்டிகள் மற்றும் 18 ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர்.
இந்த சிறப்பு ஆராய்ச்சி முன்னெடுப்பில் இனம் கண்டுள்ள அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்களின் பங்கெடுப்பு ஆவணப்படுத்தப்படும். இவர்களின் பங்களிப்பை இந்தக் கண்காட்சியில் சிறப்பாக காட்சிப்படுத்தியுள்ளனர். கண்டறியப்பட்டுள்ள முகமறியா வீரர்களுக்கு இந்தக் கண்காட்சியில் முகவரி அளிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வாழையின் பல்வேறு வகைகள் மற்றும் மதிப்புக் கூட்டப்பட்ட வாழைப்பொருட்கள் அடங்கிய கண்காட்சியையும் ஆளுநர் பார்வையிட்டார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu