அ.தி.மு.க பொதுக்குழுவுக்கு தடை கோரிய மனு: உரிமையியல் நீதிமன்றம் அதிரடியாக தள்ளுபடி
அ.தி.மு.க பொதுக்குழுவுக்கு தடைகோரிய மனுவை சென்னை உரிமையியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது தான் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தரப்பை அதிர்ச்சியின் உச்சத்துக்கே கொண்டு சென்றுள்ளது. இதுதொடர்பாக, அ.தி.மு.கவை சேர்ந்த சி.பாலகிருஷ்ணன் என்பவர் தொடர்ந்த வழக்கை சென்னை உரிமையியல் நீதிமன்றம் அதிரடியாக தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்திற்கு எழுதிய கடிதத்தில், அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் இடைப்பாடி பழனிசாமி கூறுகையில், பொதுக்குழுவுக்கு வாருங்கள் எந்த பிரச்னையாக இருந்தாலும் பேசி தீர்த்து கொள்ளலாம். சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் அளவுக்கு அசாதாரண சூழல் இல்லை. திட்டமிட்டபடி பொதுக்குழு , செயற்குழு நடக்கும். ஒருங்கிணைப்பாளர்கள் என்ற முறையில் இருவரும் இணைந்து பொதுக்குழுவை கூட்டுவோம் என அழைப்பு விடுத்துள்ளார்.
அ.தி.மு.க., பொதுக்குழு நாளை நடைபெற உள்ள நிலையில், ஒற்றை தலைமை கோஷம் விஸ்வரூபம் எடுத்து உள்ளது. பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என பன்னீர்செல்வம் அளித்த மனுவை ஏற்க ஆவடி காவல்துறையினர் தடாலடியாக மறுத்து விட்டனர்.இதனால் பன்னீர்செல்வம் தரப்பினர் கடுமையாக அதிர்ந்து போயுள்ளனர்.
எப்படி பார்த்தாலும் பொதுக்குழுவை கூட்டுவதில் முன்னாள் முதல்வரும், இணை ஒருங்கிணைப்பாளருமான இடைப்பாடி பழனிச்சாமி உறுதியாக உள்ளார். அதற்கு ஏற்ப நீதிமன்றத்தின் உத்தரவும் காவல்துறை செயல்பாடும் அவருக்கு ஆதரவாகவே அமைந்துள்ளது.
மேலும் பொதுக்குழு உறுப்பினர்கள் 2,625 பேரையும் தமது பக்கம் இழுக்கும் முயற்சியில் கடந்த சில நாட்களாகவே திரைமறைவில் காய் நகர்த்திய இடைப்பாடி பழனிச்சாமி, அதில் வெற்றியும் கண்டு விட்டதாகவே சூழ்நிலைகள் அனைத்தும் அவருக்கு சாதகமாக இருப்பதன் மூலம் உணர முடிகிறது. அதனால் அ.தி.மு.க.,வின் அந்த ஒற்றைத் தலைமை இடைப்பாடி பழனிச்சாமி தான் என்பதற்கு உரிய அறிகுறிகள் அரசியல் வானில் மேகமூட்டங்கள் விலகி தெரிய ஆரம்பித்து விட்டது. எதற்கும் இன்னும் ஒருநாள் பொறுத்திருங்கள் என்கின்றனர், இடைப்பாடி பழனிச்சாமி விசுவாசிகள்..!
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu