அமைச்சரவையிலிருந்து செந்தில் பாலாஜியை நீக்கியதை நிறுத்திவைத்ததற்கு எதிராக மனு

அமைச்சரவையிலிருந்து செந்தில் பாலாஜியை நீக்கியதை நிறுத்திவைத்ததற்கு எதிராக மனு
X

சென்னை உயர் நீதிமன்றம். (கோப்பு படம்).

அமைச்சரவையிலிருந்து செந்தில் பாலாஜியை நீக்கிய உத்தரவை ஆளுநர் நிறுத்தி வைத்ததற்கு எதிராக சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அமைச்சரவையிலிருந்து செந்தில் பாலாஜியை நீக்கிய உத்தரவை ஆளுநர் நிறுத்தி வைத்ததற்கு எதிராக சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி சில வாரங்களுக்கு முன் அமலாக்கத்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். இது, தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 18 மணி நேரத்துக்கு மேல், செந்தில் பாலாஜியை, அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடர் விசாரணை நடத்திய நிலையில், அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து. அவர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பின் காவேரி தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு, அவருக்கு இருதய அறுவை சிகிச்சை நடந்தது.

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட நிலையில் செந்தில் பாலாஜி நிர்வகித்த மின்சாரத்துறையை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையை அமைச்சர் முத்துசாமிக்கும் ஒதுக்கீடு செய்ய முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ஆர்என் ரவிக்கு பரிந்துரை செய்தார். மேலும், செந்தில் பாலாஜியை துறைகள் இல்லாத அமைச்சராக இருக்கவும் முதல்வர் ஸ்டாலின் பரிந்துரைத்தார். இதில் இலாகா மாற்றத்துக்கு ஆளுநர் ஆர்என் ரவி ஒப்புதல் வழங்கினார். மாறாக இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர ஆளுநர் மறுத்துவிட்டார்.

இதுகுறித்து தமிழக அரசு மற்றும் ஆளுநர் ஆர்என் ரவிக்கும் இடையே மறைமுகமான மோதல் ஏற்பட்டது. இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் தனது அதிகாரத்தை பயன்படுத்தி அதிரடியாக உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். அதாவது இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார் என தமிழக அரசு சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. மேலும் அரசாணையும் பிறப்பிக்கப்பட்டது. இது கடந்த 16ம் தேதி நடந்தது.

இந்நிலையில் ஆளுநர் ஆர்என் ரவி நேற்று முன்தினம் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதன்படி தமிழக அமைச்சரவையில் இலாகா இல்லாத அமைச்சராக தொடரும் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கி உத்தரவிடுவதாக தெரிவித்திருந்தார். இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செந்தில் பாலாஜியை, அமைச்சரவையில் இருந்து நீக்கியதாக அறிவித்துள்ள தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியின் உத்தரவு குறித்து, செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த தமிழக முதல்வர் ஸ்டாலின், ‘ஆளுநருக்கு அந்த அதிகாரம் இல்லை; இதை சட்டரீதியாக சந்திப்போம்,’ என தெரிவித்திருந்தார்.

இதனிடையே ஆளுநரின் இந்த உத்தரவுக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கடும் கண்டனத்தை தெரிவித்திருந்த நிலையில், அடுத்த சில மணி நேரத்திலேயே அமைச்சர் செந்தில்பாலாஜியை அமைச்சரவையிலிருந்து நீக்கிய உத்தரவை உள்துறை அமைச்சரின் அறிவுறுத்தல் படி நிறுத்தி வைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அமைச்சரவையிலிருந்து செந்தில் பாலாஜியை நீக்கிய உத்தரவை ஆளுநர் நிறுத்தி வைத்ததற்கு எதிராக சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஏற்கெனவே இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார் என அரசாணை வெளியிட்டதை ரத்து செய்யக்கோரி தேசிய மக்கள் கட்சித் தலைவர் எம்.எல்.ரவி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனு இம்மாதம் ௭ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

இந்த நிலையில் தற்போது ஆளுநரின் நிறுத்திவைப்பு கடிதத்தை ரத்து செய்யக்கோரி தேசிய மக்கள் கட்சித் தலைவர் எம்.எல்.ரவி உயர்நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.மேலும் ஆளுநர் முடிவு எடுத்த பின், வேறு யாரிடமும் கலந்தோசிக்க அவசியமில்லை எனவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு அடுத்த வாரம் விசாரணைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!