பெரம்பலூரில் வாக்காளர் சுருக்கமுறை திருத்தப்பணிகள் ஆலோசனைக் கூட்டம்

பெரம்பலூரில் வாக்காளர் சுருக்கமுறை திருத்தப்பணிகள் ஆலோசனைக் கூட்டம்
X

பெரம்பலூர் மாவட்டத்தில் வாக்காளர் சுருக்கமுறை திருத்த பட்டியல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது.

பெரம்பலூர் மாவட்டத்தில் வாக்காளர் சிறப்பு சுருக்கமுறை திருத்தப்பணிகள் பற்றிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, 01.01.2022-ஐ தகுதி நாளாக கொண்டு பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள இரண்டு சட்டமன்ற தொகுதிகளிலும் 2022-ஆம் ஆண்டின் சிறப்பு சுருக்கமுறை திருத்தப்பணிகள் 01.11.2021 முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. இப்பணிகள் சிறப்பாக நடைபெறுவதை கண்காணிக்கும் பொருட்டு பிரத்தியேகமாக இந்திய தேர்தல் ஆணையத்தால் வாக்காளர் பட்டியல் சிறப்பு மேற்பார்வையாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள சிறப்பு அரசு செயலாளர் (குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை) பி.மகேஸ்வரி தலைமையில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் ப.ஸ்ரீவெங்கட பிரியா முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.

இது குறித்து வாக்காளர் பட்டியல் சிறப்பு மேற்பார்வையாளர் பி.மகேஸ்வரி தெரிவித்துள்ளதாவது:-

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி 31.12.2021 தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் தேர்தல் ஆணையம் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் செய்திட பல்வேறு விதிமுறைகளை விதித்துள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் சிறப்பு சுருக்க திருத்த முகாம்களில் பெறப்பட்ட மனுக்கள் விபரமும், அவை எவ்வாறு கள ஆய்வு செய்யப்பட்டு முடிவு செய்யப்படுகிறது என்ற விபரமும் அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

பெரம்பலூர் மாவட்டத்தில் வாக்காளர் சுருக்க திருத்தம் தொடர்பாக பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் படிவம் 6-ன்படி 4,202 மனுக்களும், படிவம் 7-ன்படி 718 மனுக்களும், படிவம் 8-ன்படி 1,160 மனுக்களும், படிவம் 8ஏ-ன்படி 553 மனுக்களும் என மொத்தம் 6,633 மனுக்களும், குன்னம் சட்டமன்ற தொகுதியில் படிவம் 6-ன்படி 4,044 மனுக்களும், படிவம் 7-ன்படி 236 மனுக்களும், படிவம் 8-ன்படி 1,027 மனுக்களும், படிவம் 8ஏ-ன்படி 235 மனுக்களும் என மொத்தம் 5,542 மனுக்களும் என பெரம்பலூர் மாவட்டத்தில் 2 சட்டமன்ற தொகுதிகளிலும் 12,175 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. இம்மனுக்களின்மீது விரைந்து பரிசீலனை செய்யப்பட்டு வாக்காளர் பட்டியலில் சேர்க்க மற்றும் திருத்தம் செய்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மாவட்ட தேர்தல் அலுவலர், வாக்காளர் பட்டியல் பதிவு அலுவலர், வாக்குச்சாவடி நிலை அலுவலர் ஆகியோருடன் அரசியல் கட்சி பிரமுகர்கள் அந்தந்த பகுதிக்கான பூத் ஏஜெண்டுகள் நியமித்து வாக்காளர் பட்டியல் தயாரிக்க விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும், சிறப்பு சுருக்கமுறை திருத்தம் தொடர்பாக ஏற்கனவே சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது, வரும் 27, 28ம் தேதிகளில் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. வாக்காளர் பட்டியலில் இளம் வாக்காளர்கள் சேர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களும் ஒவ்வொரு வாக்குச்சாவடி பகுதிகளுக்கும் ஏஜென்டுகளை நியமித்து இப்பணிக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அலுவலர்களும் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த கல்லூரிகள், பொது இடங்களிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். வாக்காளர் பட்டியல் முழுமையாக செம்மையாக தயாரிக்கப் பட்டால் தான் தேர்தல் நடைமுறைகள் சிறப்பாக இருக்கும் எனவே இப்பணிகளில் அனைவரும் இணைந்து சிறப்பாக மேற்கொள்ள வேண்டும். அரசியல் கட்சியினர் வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்த பணிகள் தொடர்பாக தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்கள் மற்றும் குறைபாடுகள் இருப்பின் 1950 என்ற இலவச கட்டணமில்லா தொலைபேசி எண்ணினை தொடர்பு கொண்டு விவரங்கள் அறிந்து கொள்வதோடு ஏதேனும் குறைபாடுகள் இருப்பின் சிறப்பு மேற்பார்வையாளர் கைபேசி எண் 94452 52243 என்ற எண்ணில் அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்தார்.

முன்னதாக, குன்னம் சட்டமன்ற பேரவை தொகுதியில் தங்களது பெயரை சேர்க்க விண்ணப்பித்த ஒதியம் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன்-தனம் தம்பதியினர்களை அவர்கள் வசிக்கும் இருப்பிடத்திற்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு மேற்பார்வையாளர் மகேஸ்வரி நேரில் சென்று கள ஆய்வு செய்தார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் நா.அங்கையற்கண்ணி, வருவாய் கோட்டாட்சியர் நிறைமதி சந்திரமோகன், தேர்தல் வட்டாட்சியர் சீனிவாசன் மற்றும் அனைத்து வருவாய் வட்டாட்சியர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!