பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை 13வது கட்ட மாபெரும் தடுப்பூசி சிறப்பு முகாம்
பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை (04.12.2021) 13வது கட்டமாக மாவட்டம் முழுவதும் 190 இடங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் மாபெரும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது மாவட்ட ஆட்சியர் ப. ஸ்ரீவெங்கட பிரியா தகவல்.
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க, பெரம்பலூர் மாவட்டத்தில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் 13ம் கட்டமாக நாளை (04.12.2021) சனிக்கிழமை அன்று நடைபெற உள்ளது. நமது மாவட்டத்தில், 29 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 4 அரசு மருத்துவமனைகள், 22 அங்கன்வாடி மையங்கள், 46 பள்ளிகள், 32 துணை சுகதார நிலையங்கள், 28 கிராம பஞ்சாயத்து அலுவலகம் உள்ளிட்ட 29 இடங்களில் சிறப்பு முகாம்கள் என 190 சிறப்பு தடுப்பூசி மையங்களில் 25,000 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்திடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நமது மாவட்டத்தில் இதற்கென பெரம்பலூர் வட்டாரத்தில் 45 தடுப்பூசி மையங்களும், வேப்பந்தட்டை வட்டாரத்தில் 48 தடுப்பூசி மையங்களும், ஆலத்தூர் வட்டாரத்தில் 46 தடுப்பூசி மையங்களும், குன்னம் வட்டாரத்தில் 51 தடுப்பூசி மையங்களும் என மொத்தம் 190 சிறப்பு தடுப்பூசி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஊராட்சி மன்றத்தலைவர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், ஊரக வளர்ச்சித் துறையின் களப் பணியாளர்கள், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டப் பணியாளர்கள் (அங்கன்வாடி பணியாளர்கள்), வருவாய் துறையின் கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள், சத்துணவு அமைப்பாளர்கள், பொதுசுகாதாரத் துறை பணியாளர்கள் உள்ளிட்ட சுமார் 600க்கும் மேற்பட்ட நபர்கள் மக்களை ஒருங்கிணைக்கும் பணிகளில் ஈடுபட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
ஒவ்வொரு வீட்டிலும் உள்ள 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதுவரை தடுப்பூசி எடுத்துக் கொள்ளாதவர்களும், முதல் தவணை தடுப்பூசி எடுத்துக் கொண்டு இரண்டாம் தவணைக்கு உள்ளவர்களும் உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் கணக்கெடுப்பு செய்யப்பட்டு அவர்களின் வீடுகளுக்கு சென்று விழிப்புணர்வு செய்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, 18 வயதிற்கு மேற்பட்ட, கொரோனா தடுப்பூசி போடாத அனைவரும் மறக்காமல், மறுக்காமல் தாமே முன்வந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். எல்லோரும் ஒருங்கிணைந்து ஒற்றுமையாக கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டு, நமது பெரம்பலூர் மாவட்டத்தை கொரோனா இல்லாத மாவட்டமாக மாற்றும் வண்ணம் முனைப்புடன் செயல்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ப.ஸ்ரீவெங்கட பிரியா தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu