பெரம்பலூரில் லாரி மீது கார் மோதிய விபத்தில் ஆசிரியர் பலி
காஞ்சிபுரம் மாவட்டம், திருத்தணி கே.கே. நகர் பகுதியை சேர்ந்தவர் கருப்பையா மகன் ராஜேஷ் (37). இவரது மனைவி மகேஸ்வரி (30), மகள் காவிய சாதனா (10). ராஜேஷ், கிருஷ்ணகிரி அரசு பள்ளியில் ஆசிரியராகவும், அவரது மனைவி மகேஸ்வரி அரக்கோணத்தில் ஆசிரியராகவும் பணிபுரிந்து வருகின்றனர். மகள் காவியா சாதனா ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார்.
ராஜேஷ் தனது மாமியார் ஊரான தென்காசி மாவட்டத்தில் உள்ள செங்கோட்டைக்கு 3 நாட்களுக்கு முன்பு சென்று விட்டு நேற்றிரவு காரில் சென்னையில் டாக்டராக இருக்கும் தம்பி வெங்கடேசை பார்க்க செல்ல தனது காரில், செங்கோட்டையில் இருந்து சென்னைக்கு, திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். இன்று அதிகாலை 5 மணி அளவில் பெரம்பலூரை அடுத்த தண்ணீர் பந்தல் பகுதியில் சென்று கொண்டிருந்த போது சாலையின் இடது பக்க ஓரத்தில் விதை நெல் மூட்டை ஏற்றி வாலாஜாபாத்திற்கு செல்வதற்காக நின்று கொண்டிருந்த லாரியின் பின்புறத்தில் வேகமாக மோதியதில் காரை ஓட்டி வந்த ராஜேஷ் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும் அவரது மனைவி மகேஸ்வரி மற்றும் மகள் காவியா சாதனா ஆகிய இருவரும் போலீசார் உதவியுடன் 108 ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம், பெருமாள் கோவில் வலசு பகுதியை சேர்ந்த லாரி டிரைவரான மாரியப்பன் மகன் வெள்ளைச்சாமி (60) யை கைது செய்தனர். இந்த விபத்துக்கு குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்தால் ஏற்பட்ட போக்குவரத்து பாதிப்பைை போலீஸார் சீரமைத்தனர்.நெடுந்தொலைவு பயணம் செய்யும் வாகன ஓட்டுநர்கள் சாலைகளை அறிந்து கொள்ளும் வகையில், போதுமான ஒளிரும் ஸ்டிக்கர்கள் ஆங்காங்கே ஒட்ட சுங்கச்சாவடி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே வாகன ஓட்டிகளின் கோரிக்கையாக உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu