பெரம்பலூர் நகராட்சியில் பாதாள சாக்கடை கழிவு, நீர் மழை நீருடன் கலப்பு

பெரம்பலூர் நகர பகுதியில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து வருவதால் பொதுமக்கள் கடும் அவதி குளம் போல் தேங்கி நிற்கும் கழிவு நீர்
பெரம்பலூர், துறைமங்கலம், அரணாரை ஆகிய பகுதிகளில் புதை சாக்கடை குழாய்களில் மழை நீருடன் வெளியேறும் கழிவுநீரால் நகரப் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
பெரம்பலூர், துறைமங்கலம், அரணாரை ஆகியவை பெரம்பலூர் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளாகும். இங்குள்ள 21 வார்டுகளிலும் ரூ. 31.91 கோடியில் புதை சாக்கடை திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதன்மூலம், பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட சுமார் 7,000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளுக்கு புதை சாக்கடை திட்ட இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. தற்போது நாள்தோறும் 18 லட்சம் லிட்டர் கழிவுநீர் நெடுவாசலில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்துக்கு செல்கிறது.
இந்த கழிவுநீர், புதை சாக்கடை வழியாக வெளியேற ஆங்காங்கே நீரேற்று நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. எனினும், பெரும்பாலான பகுதிகளில் அடிக்கடி குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறி தெருக்களில் பரவுகிறது. இதனால், அப்பகுதி குடியிருப்புகளில் உள்ள மக்கள் பெரிதும் அவதியுற்று வருகின்றனர்.
இந்த நிலையில், தற்போது வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் நகரின் பல்வேறு இடங்களில் மழைநீர் வெளியேற வழியின்றி குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ளன. குறிப்பாக, ரோஸ் நகர், மதனகோபால் நகர், தென்றல் நகர் உள்ளிட்ட பகுதிகளில் புதை சாக்கடைகளிலிருந்து வெளிவரும் கழிவு, மழைநீருடன் கலந்து வழிந்தோடுகிறது.
இந்த சாக்கடைநீர் சாலையில் தேங்கி நிற்பதால், தெருக்களில் நடந்து செல்ல முடியாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், அந்தப் பகுதிகளில் துர்நாற்றம் வீசுவதோடு, கொசு உற்பத்தியாகும் இடமாகவும் மாறியுள்ளது.
நகரில் பல இடங்களில் நிலவும் இந்த பிரச்னை குறித்து சம்பந்தப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
எனவே, பாதாள சாக்கடை குழாய்களில் உள்ள அடைப்புகளை அகற்றி, கழிவுநீர் வெளியேறுவதை தடுக்க நகராட்சி அலுவலர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விவிடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu