குன்னம் அருகே டிராக்டர் சுழல் கலப்பையில் சிக்கி பள்ளி மாணவன் சாவு

குன்னம் அருகே டிராக்டர் சுழல் கலப்பையில் சிக்கி பள்ளி மாணவன் சாவு
X

டிராக்டர் கலப்பையில் சிக்கி உயிரிழந்த மாணவனை மீட்கும் கிராமத்தினர்.

குன்னம் அருகே டிராக்டரின் சுழல் கலப்பையில் சிக்கி பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள வைத்தியநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் - வேம்பு தம்பதியினர். விவசாயியான இவர்களுக்கு ராஜேஸ்வரி ( 18), தர்மசிவன் (13) என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

தர்மசிவன் நன்னை கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று ராஜேந்திரன் தனது வயலில் விதைப்பு பணிக்காக, உழவு ஓட்டுவதற்கு ஏற்பாடு செய்தார். அதே ஊரைச் சேர்ந்த பெரியசாமி மகன் மஞ்சன்(22) என்பவரை உழவு பணிக்கு அழைத்து வந்துள்ளார்.

ராஜேந்திரன் வயலில் மஞ்சன், சுழல் கலப்பை மூலமாக உழவு செய்து கொண்டிருந்தபோது அங்கு நின்றிருந்த தர்மசிவன் டிராக்டரின் பின்பக்கத்தில் கலப்பையின் மீது ஏறியதாக கூறப்படுகிறது.

இதில் நிலை தடுமாறி டிராக்டருக்கும் கலப்பைக்கும் இடையில் தவறி விழுந்ததில் சுழல் கலப்பையில் சிக்கிய தர்மசிவன் உடலில் பலத்த அடிப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை பார்த்த டிரைவர் மஞ்சன், டிராக்டரை அதே இடத்தில் நிறுத்திவிட்டு தப்பி ஓடினார்.

சம்பவம் குறித்து குன்னம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தர்மசிவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தர்மசிவனின் உறவினர்களும், பெற்றோரும் உடலை பார்த்து கதறியது வைத்தியநாதபுரம் கிராமமே சோகத்தில் மூழ்கியது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்