பெரம்பலூரில் பனை மற்றும் காதி கிராப்ட் பொருட்கள் விற்பனை அங்காடி திறப்பு

பெரம்பலூரில் பனை பொருட்கள் விற்பனை அங்காடி திறந்து வைக்கப்பட்டது.
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு மாநில பனை வெல்லம் மற்றும் தும்பு விற்பனை கூட்டுறவு இணையம்-கதர் கிராம தொழில் வாரியம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள பனை மற்றும் காதி கிராப்ட் பொருட்கள் விற்பனை அங்காடியின் திறப்பு விழா நடந்தது. அங்காடியினை கலெக்டர் கற்பகம், பிரபாகரன் எம்.எல்.ஏ. முன்னிலையில் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, குத்துவிளக்கேற்றி முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.
அப்போது கலெக்டர் கற்பகம் பேசுகையில், இந்த அங்காடியில் பனங்கற்கண்டு, பனங்கற்கண்டு மிட்டாய், பனம்பழ சாறு, சுக்கு காபி, பனை ஓலை பொருட்கள், சுக்கு காபி தூள், பனங்கிழங்கு பொடி, பதநீர், பனங்கருப்பட்டி, கதர் பொருட்கள், காதி சோப்பு வகைகள் மற்றும் கைவினைப் பொருட்கள் உள்ளிட்டவைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
உடலுக்கு ஆரோக்கியம் தரும் இயற்கையாக விளையும் பனை பொருட்களை கொண்டு, மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றி இந்த அங்காடி தொடங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இப்பொருட்களை வாங்கி பயன்படுத்தி உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
இதில் கதர் கிராம தொழில் வாரிய உதவி இயக்குனர் (திருச்சி) ரவிக்குமார், கண்காணிப்பாளர் மணிகண்டன், புதுக்கோட்டை மண்டல திட்ட அலுவலர் ஆறுமுகம், தாசில்தார் கிருஷ்ணராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தற்போது பனையில் இருந்து கிடைக்க கூடிய பதநீர், நுங்கு, கருப்பட்டி போன்ற பொருட்களை மக்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் பனை பொருட்களை விற்பனை செய்யக்கூடிய அங்காடி பெரம்பலூரில் திறக்கப்பட்டு இருப்பது மக்களிடம் வரவேற்பை பெற்று உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu