ஏரிக்கரை உடைந்து ஊருக்குள் புகுந்த வெள்ளம்
பெரம்பலூர் அருகே,முழு கொள்ளளவை எட்டிய அரசலூர் ஏரியின் கரை உடைந்து, ஏரி நீர் வயல்வெளி மற்றும் ஊருக்குள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், அரசலூர் கிராமத்தில் உள்ளது அரசலூர் ஏரி. இந்த ஏரியை நம்பி சுமார் 500 ஏக்கருக்கும் அதிகமான வயல்வெளி பாசனம் பெறுகிறது.சமீப காலமாக பெய்த கனமழை காரணமாக, சுமார் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு அரசலூர் ஏரி முழு கொள்ளளவை எட்டியது. உபரி நீர் வெளியேறும் வாய்க்கால்கள் முட்புதர்கள் நிரம்பி இருந்ததால், ஏரிக் கரை உடையும் சூழல் ஏற்பட்டது. இதனால், அரசு அதிகாரிகளை நம்பாமல், பொங்கல் பண்டிகையைக் கூட பொருட்படுத்தாமல் அன்னமங்கலம் மற்றும் அரசலூர் கிராம மக்கள் வாய்க்கால்களைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதனால், அரசலூர் ஏரி உடையும் ஆபத்திலிருந்து மீண்டதோடு மட்டுமல்லாமல், அன்னமங்கலம் ஏரியும் நிரம்பியது.
முழு கொள்ளளவை எட்டி நீர் ததும்ப நின்ற அரசலூர் ஏரிக் கரையிலிருந்து இரண்டு நாட்களாக நீர் கசியத் தொடங்கியது. நீர் கசிவைக் கட்டுப்படுத்த கிராம மக்கள் முயற்சி செய்து வந்தனர். ஆனால் திடீரென, அரசலூர் ஏரியின் கரை உடைந்து நீர் காட்டாறு போல வெளியேறியது. ஏரியிலிருந்து வெளியேறும் நீர் அரசலூர் கிராமத்திலிருந்து அன்னமங்கலம், வேப்பந்தட்டை, பாளையூர், தொண்டாப்பாடி வழியாக வேத நதி வழியாக வெள்ளாற்றில் கலந்துள்ளது.அரசலூர் ஏரியில் ஏற்பட்ட இந்த திடீர் உடைப்பால் கரையோரத்தில் இருந்த சுமார் 500 ஏக்கருக்கும் மேற்பட்ட வயல்வெளி நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் உயிர் சேதம் ஏற்படவில்லை. இது குறித்து தகவல் கிடைத்த போலீசார், பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்த் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.வெள்ள சேதத்தை அதிகாரிகள் வேடிக்கை மட்டுமே பார்த்ததாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu