பெரம்பலூர் நகர் மன்றத் தலைவராக அம்பிகா ராஜேந்திரன் பதவியேற்பு
பெரம்பலூர் நகர்மன்ற தலைவராக அம்பிகா ராஜேந்திரன் பதவி ஏற்றார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நகராட்சி மற்றும் பேரூராட்சிகளின் தலைவர், துணை தலைவர்களுக்கான மறைமுக தேர்தல் இன்று (4ம்தேதி) நடந்தது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பெரம்பலூர் நகராட்சியில் 21 வார்டு கவுன்சிலர்கள் மற்றும் குரும்பலூர், அரும்பாவூர், பூலாம்பாடி, லெப்பைக்குடிக்காடு ஆகிய பேரூராட்சிகளில் தலா 15 வார்டு உறுப்பினர்கள் வீதம் 60 கவுன்சிலர்கள் என மொத்தம் 81 வார்டு கவுன்சிலர்கள் வெற்றிப்பெற்றுள்ளனர். இவர்கள் கடந்த 2ம்தேதி கவுன்சிலர்களாக பதவி ஏற்றுக் கொண்டனர்.
இதை தொடர்ந்து தேர்தல் நடத்தும் அலுவலகமான நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலகங்களில் இன்று காலை 9.30 மணிக்கு தலைவருக்கான மறைமுகத்தேர்தல் நடைபெற்றது.
பெரம்பலூர் நகராட்சியில் மொத்தமுள்ள 21 வார்டுகளில் 15 இடங்களில் தி.மு.க.வும், 3 இடங்களில் அ.தி.மு.க.வும், 2 இடங்களில் சுயேட்சையும், ஒரு இடத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் வெற்றி பெற்று உள்ளது.
இதில் அறுதி பெரும்பான்மை பெற்றுள்ள தி.மு.க, நகராட்சி தலைவர் மற்றும் துணை தலைவர் பதவியை கைப்பற்றியது. இதில் 11வது வார்டு கவுன்சிலர் அம்பிகா பெரம்பலூர் நகராட்சி தலைவராகவும், 20 வது வார்டு கவுன்சிலர் ஹரிபாஸ்கர் துணை தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவியேற்றுக் கொண்டனர்.
குரும்பலூர் பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில், 11 இடங்களில் தி.மு.க.வும், ஒரு இடத்தில் அ.தி.மு.க.வும், 3 இடங்களில் சுயேட்சையும் வெற்றிப்பெற்றுள்ளது.
இதில் அறுதிபெரும்பான்மை பெற்றுள்ள தி.மு.க. பேரூராட்சி தலைவர் மற்றும் துணை தலைவர் பதவியை கைப்பற்றியது. இதில் 11 வது வார்டு கவுன்சிலர் சங்கீதா குரும்பலூர் பேரூராட்சி தலைவராகவும், 9 வது வார்டு கவுன்சிலர் கீதா துணை தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி ஏற்றுக்கொண்டனர்.
இதே போல் அரும்பாவூர் பேரூராட்சி தலைவராக வள்ளியம்மையும், துணை தலைவராக சரண்யாவும், பூலாம்பாடி பேரூராட்சி தலைவராக பாக்கியலட்சுமியும், துணை தலைவராக செல்வலட்சுமியும், லெப்பைகுடிக்காடு பேரூராட்சி தலைவராக ஜாஹிர் உசேனும் லெப்பைக்குடிகாடு துணை தலைவராக ரசூல் அகமது தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி ஏற்றுக்கொண்டனர்.
பெரம்பலூர் நகராட்சியில் தலைவர் மற்றும் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட அம்பிகா, ஹரி பாஸ்கர் ஆகியோருக்கு நகராட்சி ஆணையர் குமரி மன்னன் பதவி பிரமாணம் செய்து வைத்தார். அதேபோல் நான்கு பேரூராட்சிகளிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் மற்றும் துணைத் தலைவர்களுக்கு அந்தந்த பேரூராட்சி செயல் அலுவலர்கள் பதவி பிரமாணம் செய்து வைத்தனர்.
பெரம்பலூர் நகராட்சியில் நடைபெற்ற விழாவில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் உள்பட கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu