மர்மமான முறையில் விவசாயி மரணம்

மர்மமான முறையில் விவசாயி மரணம்
X
பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் அருகே 40 வயது மதிக்கத்தக்க விவசாயி மர்ம மரணம். சொத்துக்காக கொலை செய்யப்பட்டதாக உறவினர்கள் குற்றச்சாட்டு.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் அருகே கிழுமத்தூர் தூங்கா நகரைச் சேர்ந்த பொன்முடி என்பவரது மகன் வீரமுத்து (40) தற்போது துங்கபுரம் அருகேயுள்ள கோவில்பாளையம் கிராமத்தில் குடும்பத்தோடு வசித்து வருகிறார். இந்நிலையில் தனது சொந்த ஊரான கிழுமத்தூரில் உள்ள தந்தை பொன்முடியின் நிலத்தில் விவசாயம் பார்த்து வருகிறார்.

இவரது தந்தை பொன்முடி உயிரிழந்துவிட்ட நிலையில் வீரமுத்து விவசாயத்திற்காக மட்டும் கோவில்பாளையத்தில் இருந்து கிழுமத்தூருக்கு தினம்தோறும் வந்து செல்வதாக கூறப்படுகிறது. இதனிடையே வீரமுத்து வயல் வெளியில் இறந்த நிலையில் இன்று சடலமாக கிடந்துள்ளார். இதை கண்டு அதிர்ச்சியுற அப்பகுதி கிராமத்தினர் குன்னம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குன்னம் போலீஸார் வீரமுத்துவின் உடலை கைப்பற்றி உடற்கூராய்விற்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் வீரமுத்துவின் உடலை பரிசோதித்த போலீஸார் அவரின் உடலில் கொலை செய்ததற்கான அடையாளங்கள் ஏதும் இல்லாததால் இது இயற்கை மரணமா அல்லது நூதன முறையில் அரங்கேறிய கொலை சம்பவமா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே சொத்துக்காக வீரமுத்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று அவரது உறவினர் தரப்பு சந்தேகம் எழுப்பிய நிலையில், உடற்கூறு ஆய்வு அறிக்கை வெளியான பிறகே உயிர் இழப்புக்கான காரணம் தெரிய வரும் என போலீஸார் தரப்பில் தெரிவித்தனர்.

Tags

Next Story