சுவாமி சிலைகள் சேதம்: கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
சுவாமி சிலைகளை சேதப்படுத்தியவர்களை கைது செய்யக் கோரி, சிறுவாச்சூரில், இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூரில், புகழ்பெற்ற ஸ்ரீமதுரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இக்கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான, பெரியசாமி மலை அடிவாரத்தில் எழுந்தருளியிருக்கும் பெரியசாமி, செல்லியம்மன், செங்கமலையன், நீலியம்மன் உள்ளிட்ட பல லட்சம் மதிப்பிலான 14 சுடுமண் சிலைகள் கடந்த 5ம்தேதி உடைத்து சேதப்படுத்தப்பட்டது.
இதனால் பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், இரவில் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுவாச்சூர் கிராமத்தில், பெரியாண்டவர் கோவிலில் இருந்த பல லட்சம் மதிப்பிலான 13 கல் சிலைகளும், உடைத்து சேதப்பட்டுத்தப்பட்டதோடு, சிலையில் அடிப்பாகத்தில் வைக்கப்பட்டிருந்த தகடுகள் மற்றும் காசுகள் திருடப்பட்டிருந்தன. இது பலரையும் அதிர்ச்சியடையச் செய்தது.
இந்த நிலையில், குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும், சம்பவத்தை கண்டித்தும், பெரம்பலூர் மாவட்ட இந்து முன்னணி சார்பில், அதன் திருச்சி கோட்ட செயலாளர் குணசேகரன் தலைமையில், சிறுவாச்சூர் ஸ்ரீ மதுர காளியம்மன் கோயில் நுழைவு வாயில் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், இந்து முன்னணியினர், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் என சுமார் 300க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். அவர்கள், சுவாமி சிலைகளை சேதப்படுத்தியவர்களை கைது செய்ய வலியுறுத்தி முழுக்கமிட்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu