வெள்ளாற்று தடுப்பணையில் மணல் மூட்டைகளை வைத்து சீர்செய்யும் பணி தீவிரம்
வெள்ளாற்று தடுப்பணையில் மணல் மூட்டைகளை வைத்து சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
கடலூர் மாவட்ட பொதுப்பணித்துறையின் சார்பில் வெள்ளாற்றின் குறுக்கே பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறை- கடலூர் மாவட்டம் தொழுதூர் இடையே மதகுகளுடன் தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. அதில் இருந்து சுமார்4 கிலோமீட்டர் தொலைவில் பெரம்பலூர்ம மாவட்ட பொதுப்பணித்துறையின் சார்பில் கீழக்குடிக்காடு- கடலூர் மாவட்டம் அரங்கூர் கிராமத்தின் இடையே ஒரு தடுப்பணையும் ஏற்கெனவே கட்டப்பட்டுள்ள நிலையில், கடந்த ஆண்டு அகரம்சீகூர்-கீழச்செருவாய் கிராமங்களுக்கு இடையே மீண்டும் கடலூர் மாவட்ட பொதுப்பணித்துறை சார்பில் ஒரு தடுப்பணை கட்டப்பட்டது. வெள்ளாற்றில் வரும் தண்ணீரின் வேகத்தை குறைக்கும் பொருட்டு இந்த தடுப்பணை அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் இந்த தடுப்பணை அமைக்கப்பட்ட பிறகு தற்போதுதான் அதிக அளவில் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இந்நிலையில் இந்த தடுப்பணையில் தெற்கு கரையோரப்பகுதியில் சுமார் 100 அடி நீளத்திற்கு பலவீனமடைந்து கரைஅரிப்பு எடுத்து உடைந்து சரிந்தது.இதனால் அந்த பகுதியில் உள்ள அகரம் சீகூர், சு.ஆடுதுறை, ஒகளூர் உட்பட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் தண்ணீர் புகும் அபாயம் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். தகவல் அறிந்து வந்த கடலூர் மாவட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள், தற்போது மணல் மூட்டைகளை அடுக்கி அதனை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இருப்பினும் இன்று முதல் மீண்டும் வடகிழக்கு பருவமழை அதிக அளவில் பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கும் பணிகளை செய்யாவிட்டால், வேப்பூர் வட்டார பகுதிளில் 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ளாற்றின் தண்ணீர் புகுந்து விடும் அபாயம் உள்ளது என்று தெரிவிக்கும் பொதுமக்கள் தரமற்ற முறையில் தடுப்பணை கட்டப்பட்டுள்ளதாகவும், தடுப்பணையின் கரைப்பகுதிகள் அணைத்தும் வெறும் மண்ணை கொண்டு அமைக்கப்பட்டுள்ளது என்றும், அதன் கருங்கற்கள் பதித்து சிமெண்ட் பூச்சு செய்தால் மட்டுமே இதற்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என்றும் தெரிவிக்கின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu