வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்ட இளைஞர்களுக்கு பணி நியமன ஆணை
வேலைவாய்ப்பு முகாமில் தேர்வானவர்களுக்கு அமைச்சர் சிவசங்கர் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
பெரம்பலூர் ரோவர் பள்ளி வளாகத்தில், பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் ரோவர் கல்வி குழுமம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட ஆட்சியர் ப.ஸ்ரீவெங்கட பிரியா தலைமையில் நடைபெற்றது. இந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்ட இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் வழங்கினார்.
இந்நிகழ்வில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் மாவட்ட ஊராட்சி தலைவர் சி.ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த முகாமில் அமைச்சர் சிவசங்கர் பேசுகையில் கடந்த வாரம் அரியலூர் மாவட்டத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது. இன்று பெரம்பலூரில் இம்முகாம் நடத்தப்படுகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த வாரம் கோயம்புத்தூரில் நடந்த தொழில்துறை மாநாட்டில் தமிழகம் முழுவதும் பல்வேறு தொழில்களை தொடங்கிட நடவடிக்கை எடுத்துள்ளார். அதனைத் தொடர்ந்து ஓசூர் மற்றும் விழுப்புரம் பகுதியில் புதிய தொழிற்சாலைகளை துவக்கி வைத்துள்ளார். நமது பெரம்பலூர் மாவட்டத்தில் பெரிய தொழிற்சாலைகள் அதிகமில்லாத நிலை உள்ளது. அதனை மாற்றும் வகையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த முகாமில் பல்வேறு முன்னணி நிறுவனங்களும் பங்கேற்று தங்கள் நிறுவனத்திற்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்துள்ளனர். இம்முகாமில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் வருகைதந்து பங்கேற்றுள்ளனர். இதுவரை 500க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்றார்.
இந்நிகழ்ச்சியில் திருச்சி மண்டல இணை இயக்குநர் (வேலைவாய்ப்பு) மு.சந்திரன், ரோவர் கல்வி நிறுவனங்களின் துணைத்தலைவர் ஜான் அசோக், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மு.முரளிதரன், பெரம்பலூர் ஒன்றியக்குழுத்தலைவர் மீனா அண்ணாதுரை, வேப்பந்தட்டை ஒன்றியக்குழுத்தலைவர் ராமலிங்கம், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள் டாக்டர்.கருணாநிதி(வேப்பூர்) மகாதேவி ஜெயபால்(வேப்பந்தட்டை) உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu