பெரம்பலூரில் பின்பக்க கதவை உடைத்து நகை, ரூ. 20 ஆயிரம் பணம் திருட்டு
பெரம்பலூர் புறநகர் பகுதியான துறைமங்கலம் 9-வது வார்டுக்கு உட்பட்ட அவ்வையார் தெருவை சேர்ந்தவர் பரமேஸ்வரன் (வயது 37). இவருக்கு சீத்தாலட்சுமி என்ற மனைவியும், ஒரு மகள், மகன் உள்ளனர். வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த பரமேஸ்வரன் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சொந்த ஊர் திரும்பினார். பின்னர் அவர் வேலைக்கு ஏதும் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 25-ந்தேதி பரமேஸ்வரனுக்கு உடல்நலம் சரியில்லாத காரணத்தினால் சீத்தாலட்சுமி வீட்டை பூட்டி விட்டு, அவரை சிகிச்சைக்காக அரியலூர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். பின்னர் அவர் அங்கு சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை முடிந்து பரமேஸ்வரன் தனது குடும்பத்தினருடன் இன்று மாலை வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் உள்ளே சென்று அவர் பார்த்த போது, வீட்டின் பின்பக்க கிரில் கேட்டின் பூட்டு உடைக்கப்பட்டும், கதவின் தாழ்ப்பாள் உடைக்கப்பட்டும் திறந்து கிடந்தது.
மேலும் அறையில் இருந்த 2 பீரோக்களில், ஒரு பீரோவில் இருந்த 5 பவுன் நகையும், ரூ.28 ஆயிரத்து 500 திருட்டு போயிருந்தது. இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் போலீஸ் மோப்ப நாய் நிஞ்சா வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. இதற்கிடையே கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்து சென்றனர். இது தொடர்பாக புகாரின் பேரில், பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu