குடியரசு தின விழாவில் மாணவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டு
நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பாராட்டுதல்களும் பரிசுகளும் வழங்கப்பட்டது.
பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்கள் சார்பில் 73 வது குடியரசு தின விழா கல்லூரி வளாகத்தில் கொண்டாடப்பட்டது.
இந்தநிகழ்ச்சியில் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தின் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் தலைவருமான அ.சீனிவாசன் கலந்துகொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்து தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தினார்.
பின்னர் சமாதான புறா மற்றும் வண்ண பலூன்களை வானில் பறக்க விட்டார். அதனைத் தொடர்ந்து தேசிய நாட்டு நலப்பணித்திட்ட மாணவிகளின் அணிவகுப்பு மற்றும் அனைத்து கல்லூரி மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
அணிவகுப்பு முடிந்தபின் அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். பின்பு தனலட்சுமி பல்கலைகழகத்தின் மாண்பமை வேந்தரும் கல்வி நிறுவனங்களின் தலைவருமான அ.சீனிவாசன் குடியரசு தின விழா சிறப்புரை ஆற்றினார்.
இந்த நாளில் தான் அரசியலைமைப்புச் சட்டம் முதன் முதலில் நடைமுறைக்கு வந்து, இந்தியா ஒரு ஜனநாயக நாடு மற்றும் குடியரசு நாடு என பிரகடனம் செய்யப்பட்டது. இந்த 73 ஆண்டுகளில் நம் நாடு விவசாயம், கல்வி, விஞ்ஞானம், மருத்துவம் மற்றும் பாதுகாப்புத்துறைகளில் அறிய பல சாதனைகள் புரிந்துள்ளது.
உலகப் பொருளாதாரத்தில் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய அளவுக்கு இயங்கும் முக்கிய சக்திகளில் இந்தியாவும் ஒன்றாக விளங்குகிறது. மக்களுக்காக மக்களே ஆளும் ஆட்சிதான் மக்களாட்சி என்ற தத்துவத்தை தனித்துவமாக்கினார் ஆபிரகாம் லிங்கன். இந்தப் பொன்னான நாளில் தியாகிகளின் பெருமையை நினைத்துப் போற்றுவதோடு நிறுத்திவிடாமல் காந்தியின் உண்மை மற்றும் அஹிம்சையை தினசரி வாழ்க்கையில் அனைவரும் கடைபிடிக்க வேண்டும்.
ஜனநாயகம், நீதி, சுதந்திரம், சமத்துவம் ஆகியவற்றை பேணும் வகையில் பொறுப்புடன் நாம் அனைவரும் செயல்பட வேண்டும். இக்குடியரசு தினத்தன்று சமத்துவதோடும், சகோதரத்துவத்தோடும், ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கவும், ஒற்றுமையை நிலைநாட்டவும் நாட்டு மக்களின் நலனை காப்பதற்காக குடியரசு தினத்தை போற்றிடுவோம்.
மேலும் இவ்விழாவில் நீட் தேர்வில் வெற்றி பெற்ற 4 மாணவர்கள் சர்வதேச, மாநில, மாவட்ட அளவில் பரிசுகள் பெற்ற மாணவ மாணவிகள் மற்றும் அணிவகுப்பில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பாராட்டுதல்களும் பரிசுகளும் வழங்கப்பட்டது.
இவ்விழாவில் தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழுமங்களின் செயலாளர் நீலராஜ் மற்றும் கல்வி குழுமத்தை சார்ந்த முதல்வர்கள் துணை முதல்வர்கள் பேராசிரியர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர். விழாவில் அரசு குறிப்பிடும் கொரோனா வழிமுறைகள் பின்பற்றி அனைவரும் முக கவசம் அணிந்து சமூக இடைவெளி கடைப்பிடித்தும் விழாவில் பங்கேற்றனர் . மேலும் 73வது குடியரசு தின விழாவை முன்னிட்டு கல்லூரி வளாகத்தில் 73 மரக்கன்றுகளில் மரக்கன்றுகளை கல்வி நிறுவனத்தின் நிறுவனர் தலைவர் அ.சீனிவாசன் நட்டு துவக்கி வைத்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu