பெரம்பலூர் இ- சேவை மையத்தில் பணியாளர், சப்- இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல்
சப் இன்ஸ்பெக்டரை தாக்கிய கௌதம்.
பெரம்பலூர் அருகே செஞ்செரி கிராமத்தை சேர்ந்த ஜெயில் வார்டனாக இருந்து ஓய்வு பெற்றவர் கணேசமூர்த்தி. இவரது மகன் கௌதம்(34)என்பவர் ஆதார் அட்டையில் திருத்தம் செய்வதற்காக பெரம்பலூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள இ சேவை மையத்திற்கு சென்றுள்ளார்.அப்போது இ.சேவை மையத்தில் பணிபுரிந்த தனலட்சுமி(32)என்பவர்,ஆதார் அட்டையில் திருத்தம் செய்வதற்கு முகவரி உள்ள அடையாள அட்டை உள்ளிட்ட ஆதாரங்களை கேட்டதாகவும்,அதற்கு கௌதம் என்னிடமே ஆதாரம் கேட்கிறாயா என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இ.சேவை மைய பணியாளர் தனலட்சுமி பிரச்சனை குறித்து உயரதிகாரிக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவிக்க முயன்றுள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த கௌதம் ஆபாசமாக பேசி,தனலட்சுமியை அடித்ததுடன்,தோள்பட்டை பகுதியில் கடித்து வைத்துள்ளார்.இதைபார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
அதன் பேரில் பெரம்பலூர் நகர காவல் நிலைய உதவி ஆய்வாளர் பழனிச்சாமி பிரச்சனையை விசாரிக்க சென்றுள்ளார்.அங்கு சென்று விசாரித்த போது ஆத்திரமடைந்த கௌதம் உதவி ஆய்வாளர் பழனிச்சாமியையும் அடித்துள்ளார்.இதனால் பெரும்பரபரப்பு ஏற்பட்டது.இதையடுத்து கௌதமை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்து வருகின்றனர்.
இ.சேவை மைய பணியாளர் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.இவ்வாறு ஓய்வு பெற்ற ஜெயில் வார்டனின் மகன், காவல் உதவி ஆய்வாளரையும்,இ.சேவை மைய பணியாளரையும் அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu