பெரம்பலூர் மாவட்டத்தில் 760 ஹெக்டேரில் பயறு சாகுபடி செய்ய திட்டம்
பெரம்பலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு 8500 ஹெக்டேரில் சம்பா மற்றும் நவரை பருவத்தில் நெற்பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன. நெல் அறுவடைக்குப் பிறகு நெல் தரிசில் உளுந்து, பச்சைப்பயறு போன்ற பயறு வகைப் பயிர்கள் சாகுபடி செய்யப்படும். தற்போது, நெல் அறுவடைக்கு இயந்திரங்கள் பயன்படுத்துவதாலும், கால்நடை தொந்தரவாலும் நெல் தரிசில் பயறு வகைப் பயிர்கள் சாகுபடி குறைந்து கொண்டு வருகிறது.
இந்நிலையில் பயறுவகை சாகுபடியை ஊக்குவிக்க, பெரம்பலூர் மாவட்டத்தில் 700 ஹெக்டேரில் பயறு வகைப் பயிர்களை சாகுபடி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு பயறு வகைப் பயிர்களை பயிர் செய்யும் போது, வளிமண்டலத்தில் உள்ள தழைச்சத்து மண்ணில் நிலைநிறுத்தப்படுகிறது. பயறு வகைப்பயிர்களை பயிர் செய்ய குறைவான தண்ணீரே போதுமானது. மேலும் அடுத்த குறுவை நெல்லுக்குத் தேவையான தழைச்சத்து இயற்கையாகவே கிடைக்க வழிவகை செய்கிறது. குறைந்த செலவில் அதிக லாபம் கிடைக்க ஏதுவாகிறது.
நெல் தரிசில் பயறு வகைப் பயிர்கள் சாகுபடியை ஊக்குவிக்க அதிகபட்சமாக 50 சதவீத மானியத்தில் பயறு வகைப் பயிர்களின் விதைகளை விற்பனை செய்ய அனைத்து வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் போதுமான அளவு உளுந்து விதைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
மேலும் 50 சதவீத மானியத்தில் திரவ ரைசோபியம், திரவ பாஸ்போ பாக்டீரியா உயிரி உரங்கள், நுண்ணூட்ட உரங்கள் விற்பனைக்காக அனைத்து வேளாண் விரிவாக்க மையங்களிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. சம்பா மற்றும் நவரை அறுவடைக்குப் பிறகு நீர்ப் பாசன வசதியுள்ள விவசாயிகள் பெரும்பாலும் கோடைக்கால நெல் பயிர் சாகுபடியை மேற்கொள்கின்றனர், இதேபோல, குறுவை, தாளடி, கோடை என தொடர்ச்சியாக நெல் சாகுபடி செய்வதால் மண்வளம் பெரிதும் பாதிப்படைகிறது. மண்ணின் பிரதான பேரூட்டச் சத்தான தழைச்சத்தை நிலைநிறுத்த வாய்ப்பில்லாமல் போய்விடுகிறது.
இதை தவிர்த்து, மண்வளத்தைப் பாதுகாக்கக் கூடிய உளுந்து, போன்ற பயறு வகைப் பயிர்களை சாகுபடி செய்து பயன்பெறலாம் என பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் ப.ஸ்ரீவெங்கட பிரியா தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu