பெரம்பலூரில் நகைக்கடை உரிமையாளரிடம் கத்தி முனையில் 105 சவரன் கொள்ளை
பெரம்பலூர், துறையூர் சாலையில் ஜுவல்லர்ஸ் உரிமையாளர் வீட்டின் விசாரணை நடத்திய காவல்துறையினர்.
பெரம்பலூரில் உள்ள பிரபல நகைக்கடை (ஆனந்த் ஜூவல்லரி மற்றும் ஆனந்த் ரெடிமேட் ஷோரூம்) உரிமையாளர் கருப்பண்ணன், 65. இவருக்கு பெரம்பலூர் சங்குப்பேட்டை அருகேயுள்ள சர்ச் ரோட்டில் பூர்வீக வீடு உள்ளது. அதே போல எளம்பலூர் சாலையில் உள்ள ஜூவல்லரியின் மாடியிலும் ஒரு வீடு உள்ளது.
சங்குப்பேட்டை வீட்டில் கருப்பண்ணன் மட்டும் இரவு தங்கியுள்ளார். இவரது மகள் ரேணுகா(32), மனைவி பரமேஸ்வரி(55) ஆகியோர் எளம்பலூர் சாலையில் நகைக்கடையின் மேல் உள்ள வீட்டில் தங்கியுள்ளனர். இவரது மகன் ஆனந்த், வேலை விஷயமாக திருச்சி சென்று விட்டார்.
இந்நிலையில், மகன் வந்துவிடுவதாக கூறியதால், கருப்பண்ணன் தனது வீட்டின் கதவை திறந்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இரவு 11மணியளவில், முகமூடி அணிந்த நிலையில் காரில் வந்து, உள்ளே சென்ற மர்ம நபர்கள் 3 பேர், வீட்டில் தனியாக இருந்த கருப்பண்ணனின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியுள்ளனர்.
பின்னர், அவரிடம் இருந்து பீரோ சாவியை வாங்கி, அதனை திறந்து பீரோவில் இருந்த நெக்லஸ், செயின், மோதிரம் உள்ளிட்ட 105 சவரன் தங்க நகைகளையும், 9 கிலோ வெள்ளி பொருட்களையும் கொள்ளையடித்துள்ளனர். பின்னர், வீட்டு வாசலில் நின்றிருந்த சொகுசு காரில் ஏறி தப்பிச்சென்றுள்ளனர்.
இதுகுறித்து கருப்பண்ணன் கொடுத்த புகாரின் பேரில், பெரம்பலூர் நகர போலீசார் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைரேகை பரிசோதனையும், மோப்பநாய் சோதனையும் செய்யப்பட்டுள்ளது. வீட்டில் இருந்த சிசிடிவி கேமரா பழுதாகி விட்டநிலையில், சாலையில் உள்ள கட்டிடத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகள் மூலமாக காவல்துறை உயர் அதிகாரிகள் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணி நேரில் வந்து விசாரணை நடத்தினார். கொள்ளைபோன பொருட்களின் மதிப்பு சுமார் ரூ.60 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. வீடுகள் மிகவும் நெருக்கமாகவும், 24 மணி நேரமும் பொதுமக்கள் நடமாட்டம் உள்ள நகரின் மையப் பகுதியில் நடந்த இந்த கொள்ளை சம்பவத்தினால், பெரம்பலூரில் பரபரப்பு நிலவுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu