'நமக்கு மக்கள் தான் எஜமானர்கள்' -அதிகாரிகளுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுரை
முதல்வர் மு.க. ஸ்டாலின்.
சென்னை தலைமைச் செயலகத்தில் மாவட்ட கலெக்டர்கள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் வனத்துறை அலுவலர்கள் பங்கேற்றுள்ள 3 நாட்கள் மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டை தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்து பேசினார். இன்று 2-வது நாளாக மாநாடு நடைபெற்று வருகிறது.
இந்த மாநாட்டில் முதலமைச்சர் மு .க .ஸ்டாலின் தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ பல்வேறு அறிவுரைகளை கலெக்டர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு வழங்கினார்.
சட்டம் ஒழுங்கிற்கும், பொது அமைதிக்கும் குந்தகம் விளைவிக்கும் சமூக விரோத சக்திகள் ,கூலிப்படைகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என அவர் கறாராக கூறினார்.
மேலும் 500க்கும் அதிகமான வாக்குறுதிகளை பொதுமக்களுக்கு நாங்கள் வழங்கியிருக்கிறோம். அவற்றில் 70 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளில் தற்போது ஈடுபட்டு வருகிறோம். மனித சமுதாயத்தின் வளர்ச்சியில் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை ஆகியவற்றின் முக்கியத்துவத்தை உணர்த்தும் இந்த ஒருங்கிணைந்த மாநாடு என குறிப்பிட்டார்.
தொடர்ந்து அவர் பேசுகையில் மாவட்டம், வட்டம், வட்டாரம் சிற்றூர் அளவில் தீர்க்க வேண்டிய பிரச்சினைகளை உரிய காலத்தில் செய்யாமல் இருப்பதால் பெரும்பாலான மக்கள் கண்ணீரோடு தலைமைச் செயலாளருக்கு மனுக்களை அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். அவற்றை கருணையோடு பரிசீலனை செய்து விரைவாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
நமது அரசின் திட்டங்களால் பயன்பெறும் பயனாளிகளின் விவரங்களை துறைவாரியாக தொகுக்க வேண்டும். எனது கனவு திட்டமாக இருக்கும் 'நான் முதல்வன்' திட்டத்தில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். நீங்கள் இந்த உயரத்தை அடைய யாரோ ஒருவர் தூண்டுதலாக இருந்தது போல நீங்களும் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு இளைஞர்களுக்கு வழிகாட்டியாக மாறி ஊக்கப்படுத்த வேண்டும் என்றார்.
தொடர்ந்து அவர் பேசுகையில் அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் மக்கள் தான் எஜமானர்கள் இதனை உணர்ந்து அதிகாரிகள் தங்கள் பணிகளைச் செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu