தேவர் ஜெயந்தியை பள்ளிகளிலும் கொண்டாட பெற்றோர் ஆசிரியர் கழகம் வலியுறுத்தல்!
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பிரசாத். (கோப்பு படம்).
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பிரசாத் வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை அக்டோபர் 30 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. தமிழகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய தலைவர்களில் மிகமிக முக்கியமானவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர். சுதந்திரப் போராட்ட காலத்தில் இளைஞர்களின் நாயகனாக இருந்த நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களை தலைவராக ஏற்று, சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டவர். நேதாஜியின் இந்திய தேசிய ராணுவப் படைக்கு தமிழகத்திலிருந்து பெரும் படையைத் திரட்டி அனுப்பியவர்.
'தேசியம் என் உடல், தெய்வீகம் என் உயிர்', 'தேசியமும், தெய்வீகமும் என் இரு கண்கள்' என்ற பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் முழக்கம் லட்சக்கணக்கான இளைஞர்களின் உணர்வுகளைத் தட்டி எழுப்பியது. தனிமனித ஒழுக்கத்திலும், மனிதநேயத்திலும் வாழ்வியல் முறைகளிலும் இலக்கணமாக வாழ்ந்த சிறந்த சிந்தனையாளர். தன்னுடைய அனல் தெறிக்கும் பேச்சால் ஆங்கிலேயர்களுக்கும், தேச விரோதிகளுக்கும் சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார்.
1908 அக்டோபர் 30 ஆம் தேதி பிறந்த அவர், 1963 அக்டோபர் 30 ஆம் தேதி மறைந்தார். பிறந்த நாளிலேயே மறைந்த தேவரை ஆண்டுதோறும் அக்டோபர் 30-ம் தேதி குரு பூஜையாக வழிபாட்டு வருகின்றோம்.
கோயிலுக்குச் செல்வது போல அவரது நினைவிடத்திற்கு பால் குடம், தீச்சட்டி, அலகு குத்தி, பொங்கல் வைத்து வணங்கி வருகின்றனர். மறைந்து 60 ஆண்டுகளாகியும் மக்கள் அவரிடம் காட்டும் பேரன்பு வியக்க வைக்கிறது. *வாழ்நாள் முழுவதும் மாணவர்கள், இளைஞர்களுக்கு ஊக்கமளித்த, சமுதாய முன்னேற்றத்திற்கு பாடுபட்ட பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் போன்ற தலைவர்களை இன்றைய இளம் தலைமுறையினரிடம் கொண்டுச் சேர்க்க வேண்டும்.*
அவரது பிறந்த நாள், நினைவு நாளான அக்டோபர் 30 ஆம் தேதி பள்ளிக்கூடங்களில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பற்றி மாணவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். 'சுவர் இல்லாமல் சித்திரம் வரைய முடியாது'. தேசம் இல்லாவிட்டால் மனிதனுக்கு அமைதியான வாழ்க்கை வாழ முடியாது. இதை உணர்ந்து பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை மாணவச் செல்வங்களிடம் கொண்டுச் செல்ல வேண்டும்.
பள்ளிக்குச் செல்லும் சிறுவர்களை பெருமளவில் சீரழித்து சமூக விரோதிகளாக சீரழித்து வரும் கஞ்சா போதை கலாச்சாரம், குடி, புகை பழக்க வழக்கங்கள் , ஆபாச வலைத்தளங்கள் இவற்றிலிருந்து பள்ளி குழந்தைகளை பாதுகாக்க முத்துராமலிங்க தேவர் ஐயா அவர்களின் ஒழுக்கமான வாழ்க்கை நெறிமுறைகளை, அவரின் அறிவுரைகளை, மாணவர்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும், அது மாணவர்களிடம் தேசப் பகதியை வளர்க்கும். கல்வி கற்கும் காலத்திலும், எதிர்கால வாழ்க்கையிலும் தவறான பழக்க வழக்கங்கள் இல்லாமல் நல்ல மாணவனாக, தேசப்பற்று கொண்ட நல்ல குடிமகனாக, தன்னுடைய வாழ்க்கையை சுய சிந்தனையுடன் சிறப்பாக அமைத்துக் கொள்வதற்கு வழி வகுக்கும்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பிறந்த நாளை அரசு விழாவாகக் கொண்டாடும் தமிழக அரசு, அவரது சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதோடு நின்று விடாமல், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை மாணவர்களிடம் கொண்டுச் செல்லும் வகையில், பள்ளிகளில் அவருடைய பிறந்தநாளை கொண்டாடும் வகையில் தமிழக மாணவர் ஒழுக்கம், ஒற்றுமை, ஒருமைப்பாட்டு தினம் என அறிவித்து புகை, போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் அனைத்து பள்ளிகளிலும் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும். அதில் பெற்றோர் ஆசிரியர் சங்கங்களையும் ஈடுபடுத்த வேண்டும் என தமிழ்நாடு தனியார் பள்ளிகள் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பிரசாத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu