முதலமைச்சரின் காலை உணவு திட்டத்திற்கு திருச்சி மாணவி பெற்றோர் பாராட்டு
பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் (பைல் படம்).
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மாணவர்கள் நலனைக் கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறார். நகரம் மற்றும் கிராமப்புறப் பகுதிகளில் பள்ளிக்குச் செல்லக்கூடிய குழந்தைகள் காலையிலேயே புறப்பட்டு விடுவதாலும், குடும்ப சூழல் காரணமாகவும் பெரும்பாலான குழந்தைகள் காலை உணவு சாப்பிடுவதில்லை.
இதனையறிந்த முதல் அமைச்சர் ஸ்டாலின் அரசு பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை நேரத்தில் உணவு வழங்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க "முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினை" அறிவித்து கடந்த 15.09.2022 அன்று மதுரை மாநகரில் தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து, திருச்சி மாவட்டத்தில், துறையூர் ஊராட்சி ஒன்றியம், நடுவலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினை நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு 16.09.2022 அன்று 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவினை வழங்கி தொடங்கி வைத்தார்.
ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்படாமல் இருத்தல், ஊட்டச்சத்து நிலையை உயர்த்துதல், பள்ளிகளில் மாணவர்களின் வருகையை அதிகரித்தல், வேலைக்குச் செல்லும் தாய்மார்களின் பணிச்சுமையை குறைத்தல் ஆகியவற்றை முக்கிய குறிக்கோளாகக் கொண்டு "முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்" செயல்படுத்தப்படுகிறது.
பள்ளிகளில் காலை உணவு வழங்குவதால் மாணவர்கள் கற்றல் திறன் மேம்படுவதாகவும், மாணவர் வருகை அதிகரிப்பதாகவும், சம்பந்தப்பட்ட பள்ளிகளின் ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். பள்ளிகளில் வாரந்தோறும் திங்கட் கிழமை ரவா உப்புமாவுடன், காய்கறிச் சாம்பார் செவ்வாய்க் கிழமை சேமியா காய்கறி கிச்சடி, புதன் கிழமை வெண் பொங்கலுடன் காய்கறிச் சாம்பார், வியாழக் கிழமை அரிசி உப்புமாவுடன் காய்கறிச் சாம்பார், வெள்ளிக்கிழமை ரவா கேசரியுடன் சேமியா காய்கறி கிச்சடி ஆகியவை மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படுகிறது.
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை சிறப்பாகச் செயல்படுத்த சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, ஊரக வளர்ச்சித்துறை, நகராட்சி நிர்வாகத்துறை, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், பள்ளிக் கல்வித்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் மற்றும் உணவு பாதுகாப்புத் துறை ஆகிய துறைகளின் அலுவலர்களைக் கொண்ட மாநில, மாவட்ட மற்றும் பள்ளி அளவிலான கண்காணிப்புக் குழுக்கள் உருவாக்கப்பட்டு இத்திட்டத்தின் செயல்பாடு கண்காணிக்கப்படுகிறது.
இத்திட்டம் குறித்து திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார் தெரிவித்ததாவது:-
திருச்சி மாவட்டத்தில், முதற்கட்டமாக திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் 40 பள்ளிகளிலும் துறையூர் ஒன்றியத்தில் 41 பள்ளிகளிலும் என மொத்தம் 81 பள்ளிகளில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. திருச்சி மாநகராட்சிப் பகுதியில் 40 பள்ளிகளில் 2928 மாணவ, மாணவிகளுக்கும், துறையூர் ஒன்றியத்தில் உள்ள 41 பள்ளிகளில் 2705 மாணவ, மாணவிகளுக்கும் என 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் 5633 மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டு பயன்பெற்று வருகின்றனர். திருச்சி மாநகராட்சிப் பகுதியில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு அரசு சையது முர்துசா மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஒருங்கிணைந்த சமையல் கூடம் அமைக்கப்பட்டு வெளி ஆதாரமுறையில் காலை உணவு தயாரிக்கப்பட்டு 2928 மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படுகிறது. துறையூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 41 தொடக்கப்பள்ளிகளில் அங்குள்ள சத்துணவு மையங்களில் பயிற்சி பெற்ற மகளிர் சுய உதவிக் குழுவினரால் காலை உணவு தயாரிக்கப்பட்டு 2705 மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படுகிறது. திருச்சி மாவட்டத்தில் இத்திட்டம் முழுமையாகச் செயல்படுத்தப்படும் போது கூடுதலாக 1488 பள்ளிகளில் பயிலும் 1,96,733 மாணவ, மாணவிகள் பயன்பெறுவார்கள்.
இத்திட்டத்தின் மூலம் பயனடைந்த பச்சமலைப் பகுதியில் படிக்கும் ஒரு மாணவன் மற்றும் மாணவியின் பெற்றோர் செல்வி- பழனிமுருகன் தம்பதியினர் கூறியதாவது:-
பழங்குடியின மக்களாகிய நாங்கள் துறையூர் ஊராட்சி ஒன்றியம், பச்சமலையில் உள்ள தோனூர் கிராமத்தில் கூலி வேலை செய்து வாழ்ந்து வருகிறோம். எங்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். எங்களது மகன் தானிஷ்குமார் ஐந்தாம் வகுப்பும், மகள் ஜனனி முதல் வகுப்பும் கோவிந்தாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் படித்து வருகின்றனர். உண்மையாகவே இந்த காலை உணவுத் திட்டமானது எங்களுடைய குழந்தைகளுக்கு மிகவும் உதவிகரமாக உள்ளது. குழந்தைகள் காலையில் பள்ளிக்குச் செல்லும் போது அவசர அவசரமாக ஏதேனும் இருப்பதை சாப்பிடக் கொடுத்து பள்ளிக்கு அனுப்பி வைப்போம். சில நேரங்களில் காலை உணவு சாப்பிடாமலே குழந்தைகள் பள்ளிக்குச் சென்று விடுவார்கள். ஆனால் இந்த திட்டத்தின் மூலம் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவினை கொடுப்பது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும்,பாடங்களையும் நல்ல முறையில் கவனித்து படிக்கிறார்கள். எங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த சிறப்பான காலை உணவு திட்டத்தை வழங்கிய முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
இத்திட்டத்தின் மூலம் பயனடைந்த திருச்சி புத்தூர் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் 5 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி முகிதா ஸ்ரீ வர்ஷா கூறுகையில் எனது பெயர் முகிதா ஸ்ரீ வர்ஷா. நான் புத்தூர் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வருகிறேன். எனது தங்கை முகில் யாழினி இதே பள்ளியில் முதல் வகுப்பு படித்து வருகிறாள் .எனது தந்தை ஹோட்டலில் கூலி வேலை செய்து வருவதால் காலையிலேயே வேலைக்குச் சென்று விடுவார். எனது அம்மா கைக்குழந்தையான எனது தம்பியினை கவனித்துக் கொள்வதால் காலை உணவு சாப்பிட்டு பள்ளிக்கு வருவது கஷ்டமாக இருந்தது. சில நேரங்களில் சாப்பிடாமல் பள்ளிக்கு வருவதால் பாடத்தை கவனிப்பது சிரமமாக இருந்தது. தூக்க மயக்கமாகவும்இருக்கும். இப்போது கொண்டு வந்த காலை உணவுத் திட்டத்தில் உணவு சாப்பிடுவதால் பசி தீர்ந்து உள்ளம் உற்சாகமாக இருக்கிறது. இதனால் நானும் என் தங்கையும் தற்போது படிப்பில் கவனம் செலுத்தி படிக்க முடிகிறது என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu