"தமிழ்நாடு தன்னுரிமை கழகம்" என்ற புதிய கட்சி பழ.கருப்பையா துவக்கம்

இதுதொடர்பாக சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த பழ.கருப்பையா பேசியதாவது: தமிழ் தேசியத்தை நான் ஒரு போதும் ஆதரிக்கமாட்டேன். காந்தியின் கொள்கைகளை பின்பற்றி அரசியல் கட்சி தொடங்கி இருக்கிறேன். அதேசமயம் தமிழ், தமிழர் உரிமைகளை பாதுகாக்க எனது கட்சி செயல்படும். வருகின்ற 5ம் தேதி கட்சி தொடக்கம் தொடர்பாக மாநாடு நடைபெற இருக்கிறது. தமிழ்நாட்டின் நிழற்படம் மற்றும் காந்தி படம் கட்சியில் இடம் பெற்றிருக்கும்.
புதிய கட்சிகள் உருவாக வேண்டிய தேவை தற்போது ஏற்பட்டுள்ளது. காந்தி சுதந்திரத்தை பற்றியே கவலைபடவில்லை, மக்களை பற்றிதான் கவலை கொண்டார். பொறுக்கி தின்ன வேண்டும் என்று நினைக்கிற யாரும் எங்கள் கட்சிக்கு வர வேண்டாம். மக்களுக்கு நல்லது செய்ய நினைப்பவர்கள் எங்கள் கட்சிக்கு வாருங்கள் என்று அழைக்கிறோம்.
எங்கள் மதம் சைவம், இந்த சமயத்தில் இந்து என்று சொல்வது தவறு. இந்து சமய அறநிலையத் துறையை தமிழ் சமய அறநிலையத் துறை என மாற்றுங்கள் என்று நான் ஏற்கெனவே சொன்னேன். நாளை பிள்ளை (கட்சி) நடக்கும் என்பது நம்பிக்கை. இன்றுதான் பிள்ளை மண்ணில் விழுந்துள்ளது. நாங்கள் வளர்வது கடினம்தான். ஆனால் நம்பிக்கையுடன் இருப்போம். எந்த மொழி பேசினாலும் அவர்கள் தமிழர்கள்தான். தமிழர்தான் ஆள வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடில்லை. தமிழ் பற்றி சிந்திப்பவன் தமிழன்தான்.
தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் தற்போது ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை வேட்பாளருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் தனது குடும்ப பாரம்பரியத்தையும் காங்கிரஸ் கட்சியின் கொள்கை கோட்பாடுகளை மறந்து திமுகவுக்கு சலாம் போட்டு இருக்கிறார். அதற்கு அவர் திமுகவில் இணைந்து கொள்ளலாம். தற்போது உள்ள கூட்டணி கட்சிகள் திமுக எந்த தவறு செய்தாலும் அதனை விமர்சிப்பதில்லை. கூட்டணி வேறு கொள்கை வேறு என்பது உணர்ந்து செயல்படவில்லை. எங்கள் கட்சியும் கட்சி கொடியும் காந்தியை மையப்படுத்திதான் இருக்கும். இவ்வாறு பழ.கருப்பையா தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu