அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி செயல்பட தடை விதிக்க கோரி வழக்கு
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. (கோப்பு படம்).
அதிமுக தொடர்பான வழக்கில் கடந்த ஜூலை மாதம் 11 ஆம் தேதி நடைபெற்ற பொதுக் குழு தீர்மானங்களுக்கும், பொதுச் செயலாளர் தேர்தலுக்கும் தடை கோரி ஒ. பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜெ.சி.டி.பிரபாகர் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை நீதிபதி குமரேஷ்பாபு இன்று தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார்.
இந்த தீர்ப்பை ரத்து செய்யக் கோரியும், தடைவிதிக்கக் கோரியும் மேல்முறையீடு செய்ய இருப்பதாகவும், அந்த மனுக்களை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என பன்னீர்செல்வம் தரப்பினர் நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் அடங்கிய அமர்வில் உடனடியாக முறையீடு செய்தனர்.
அந்த மனுக்களை நாளை விசாரிப்பதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன் தரப்பில் மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. பன்னீர்செல்வம் சார்பில் வழக்கறிஞர் ராஜலட்சுமியும், மனோஜ் பாண்டியன் சார்பில் வழக்கறிஞர் இளம்பாரதியும் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
அந்த மனுக்களில், தனி நீதிபதியின் உத்தரவு முன்னுக்குப்பின் முரணாக உள்ளது என்றும், கட்சி விதிகளுக்கு எதிராக உள்ளதாகவும் குறிப்பிட்டு உள்ளனர். தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை கோரும் இந்த மேல்முறையீடு வழக்கில் உத்தரவு பிறப்பிக்கும் வரை அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி செயல்பட தடைவிதிக்க வேண்டும் என்றும், தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதேபோல, வைத்திலிங்கம் மற்றும் ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் நாளை காலை மனுத்தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இருப்பினும், நீதிமன்ற உத்தரவிற்குப் பிறகு அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu