எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை விவகாரம்: வெளிநடப்பு செய்த அதிமுக எம்எல்ஏகள்
எடப்பாடி பழனிச்சாமி (பைல் படம்).
தமிழ்நாடு சட்டசபையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில், அதிமுகவினர் கொடுத்த தீர்மானங்களை முன்மொழிய எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார். ஆனால் ’எதிர்க்கட்சி தலைவர் சொல்வதை ஏற்க கூடாது என்பதல்ல. இன்றைக்கு அரசினர் தீர்மானம் உள்ளது. ஆகையால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கொடுத்த தீர்மானத்தை நாளை எடுக்கலாம்’ என்று அவை முன்னவர் துரைமுருகன் தெரிவித்தார். இதனால் அதிமுக எம்எல்ஏகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். முழக்கங்களை எழுப்பினர்.
அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, “எதிர்க்கட்சியில் பெரும்பான்மையான சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சித் துணைத் தலைவரை தேர்ந்தெடுத்து கடிதம் அனுப்பியுள்ளோம். ஆனால் நீங்கள் ஏற்க மறுக்கிறீர்கள். எதிர்க்கட்சித் தலைவரை போலவே எதிர்க்கட்சித் துணைத் தலைவரையும் ஏற்க வேண்டும். பெரும்பான்மையான உறுப்பினர்கள் சேர்ந்து எதிர்க்கட்சித் துணைத் தலைவரை தேர்ந்தெடுத்துள்ளோம்” என்றார்.
இதற்கு பதிலளித்த சபாநாயகர் அப்பாவு, “பேரவையின் நடைமுறையில் முதலிலும் இறுதியிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தான் பேசுகின்றனர். எப்போதுமே முன்வரிசையில் இருப்பவர்கள் யார் எழுந்தாலும் வாய்ப்பு கொடுக்கிறேன். சட்டப்பேரவை ஏற்கனவே இருந்த மரபு படியே செயல்படுகிறது” என்று தெரிவித்தார்.
பின்னர் பேசிய எடப்பாடி பழனிசாமி, “நான் ஒரு நிமிடம் பேசினால் பேரவைத் தலைவர் 5 நிமிடம் பேசுகிறார். எதிர்கட்சி தலைவர் பேசுவது நேரடி ஒளிபரப்பு செய்வதில்லை. அமைச்சர்கள், முதலமைச்சர் பேசுவது மட்டும்தான் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது” என்று குற்றம்சாட்டினார். அதற்கு, “எந்த வகையிலும் உங்கள் கருத்துகளை பதிவு செய்யக்கூடாது என்பதை சபையும், முதலமைச்சரும் விரும்பவில்லை” என்று சபாநாயகர் அப்பாவு பதிலளித்தார்.
இதனையடுத்து பேசிய அமைச்சர் துரைமுருகன், “எதிர்க்கட்சித் தலைவர் கூறும் அதே குற்றச்சாட்டை, நாங்கள் அதே இடத்திலிருந்து பேசியிருக்கிறோம். நான் பேச நினைப்பதெல்லாம் நீங்கள் பேசுகிறீர்கள்” என்று கூறினார். அவரைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் எ.வ.வேலு, “சபாநாயகராக அப்பாவு பொறுப்பேற்றது முதல் ஜனநாயக முறையில், நடுநிலையோடு தான் செயல்பட்டு வருகிறார்” என்று தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவர் இல்லாத போது எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பேசுவது மரபாக உள்ளது என்றும், அதனை பேரவை கடைபிடிக்கவில்லை என்றும் கூறி, எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்எல்ஏகள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu