திருநெல்வேலி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை கட்டடங்கள் திறப்பு
சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து கட்டடங்களை திறந்து வைக்கும் முதல்வர் ஸ்டாலின்.
சென்னை தலைமைச் செயலகத்தில், கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறை சார்பில் திருநெல்வேலியில் 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸின் வணிக வளாகம், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் 1 கோடியே 50 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கோ- ஆப்டெக்ஸின் விற்பனை நிலையம் மற்றும் 2 கோடியே 28 இலட்சத்து 54 ஆயிரம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள மூன்று மாவட்ட அளவிலான சாயக்கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்துடன் கூடிய சாயச்சாலை கட்டடங்கள் ஆகியவற்றை முதல்வர் திறந்து வைத்தார்.
தமிழ்நாட்டின் கைத்தறி தொழில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தொன்மையும், உயரிய பாரம்பரிய சிறப்பும், தனித்துவ வேலைப்பாடுகளும் கொண்டது. கைத்தறி தொழிலில் இந்திய அளவில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்வதுடன், உலகளவில் பிரசித்தி பெற்ற கைத்தறி இரகங்கள் நெசவாளர்களால் இங்கு உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழ்நாடு அரசின் மேற்பார்வையின் கீழ் 1107 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இச்சங்கங்கள் மூலம் நெசவாளர்களுக்கு தொடர் வேலைவாய்ப்பும், உத்திரவாதமான கூலியும், பல்வேறு நலத்திட்ட உதவிகளும் அரசால் வழங்கப்பட்டு வருகிறது. கைத்தறி, விசைத்தறி மற்றும் துணிநூல் பிரிவுகளின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்காகவும், நெசவாளர்களின் நலனுக்காகவும் தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில், நெசவாளர்களின் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்த உதவும் வகையில், விருதுநகர் மாபெரும் கைத்தறி குழும திட்டத்தின் கீழ், திருநெல்வேலியில் 9,320 சதுர அடி பரப்பளவில் 4 கோடி ரூபாய் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸின் வணிக வளாகம், கைத்தறி ஆதரவு திட்டத்தின் கீழ் கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் 1,900 சதுர அடி பரப்பளவில் 1 கோடியே 50 இலட்சம் ரூபாய் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸின் விற்பனை நிலையக் கட்டடத்தையும் முதல்வர் திறந்து வைத்தார்.
மேலும், நெசவாளர்களுக்கு வழங்கப்படும் நூலினை தரமான முறையில் சாயமிட்டு வழங்க ஏதுவாக, விருதுநகர் மாபெரும் கைத்தறி குழுமத் திட்டம் (Virudhunagar Mega Handloom Cluster Scheme) மற்றும் கைத்தறி ஆதரவு திட்டம் நிதியுதவியுடன் மதுரை மாவட்டம், தொட்டியபட்டியில் 72 இலட்சத்து 6 ஆயிரம் ரூபாய் செலவிலும், சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் 84 இலட்சத்து 37 ஆயிரம் ரூபாய் செலவிலும், தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் 72 இலட்சத்து 11 ஆயிரம் ரூபாய் செலவிலும், என மொத்தம் 2 கோடியே 28 இலட்சத்து 54 ஆயிரம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள மூன்று மாவட்ட அளவிலான சாயக்கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்துடன் கூடிய சாயச்சாலை கட்டடங்கள் ஆகியவற்றை முதல்வர் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறை முதன்மைச் செயலர் தர்மேந்திர பிரதாப் யாதவ், கைத்தறி துறை ஆணையர் கே.விவேகானந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu