தாழ்தள பேருந்துகளை மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டும்; சென்னை உயர் நீதிமன்றம்

தாழ்தள பேருந்துகளை மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டும்; சென்னை உயர் நீதிமன்றம்
X

சென்னை உயர் நீதிமன்றம். (கோப்பு படம்).

தமிழகத்தில் வரும் காலங்களில் தாழ்தள பேருந்துகளை மட்டுமே கொள்முதல் செய்ய அரசு முயற்சிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாற்றுத் திறனாளிகள் அணுகும் வகையில் பேருந்துகள் கொள்முதல் செய்ய உத்தரவிடக் கோரி வைஷ்ணவி ஜெயக்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். அந்த மனுவில், 1,107 பேருந்துகளை கொள்முதல் செய்வது தொடர்பாக அரசு வெளியிட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்து இருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு, 1,107 பேருந்துகளில் 157 பேருந்துகளை தாழ்தள பேருந்துகளாக கொள்முதல் செய்ய வேண்டும் எனவும், மீதமுள்ள 950 பேருந்துகளையும் கொள்முதல் செய்வதற்காக கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட டெண்டரின் அடிப்படையில் நடைமுறைகளை தொடர, அரசுக்கு அனுமதியளித்து உத்தரவிட்டது.

157 தாழ்தள பேருந்துகளை கொள்முதல் செய்வதற்காக தனியாக டெண்டர் கோர தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், ஏற்கெனவே டெண்டர் கோரப்பட்ட 342 தாழ்தள பேருந்துக்ளையும் சேர்த்து, 499 தாழ்தள பேருந்துகளையும் எந்தெந்த வழித்தடங்களில் இயக்கலாம் என்பது குறித்து அடையாளம் காண, போக்குவரத்து துறை, சாலை போக்குவரத்து நிறுவனம், மாற்றுத் திறனாளிகள் அமைப்பு பிரதிநிதிகள் அடங்கிய குழுவை அமைக்கவும் உத்தரவிட்டனர்.

இந்த நிலையில், வழக்கு விசாரணையின்போது, உச்ச நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றம் ஆகியன பல உத்தரவுகளை பிறப்பித்தும், தாழ்தள பேருந்துகள் இயக்கப்படவில்லை என வேதனை தெரிவித்த நீதிபதிகள், இனி வரும் காலங்களில் தாழ்தள பேருந்துகளை மட்டுமே கொள்முதல் முயற்சிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

தற்போது கொள்முதல் செய்யப்பட உள்ள 499 தாழ்தள பேருந்துகளும் இயக்கப்பட உள்ள சென்னை, மதுரை, கோவை, திருச்சி ஆகிய நகரங்களில், இந்த பேருந்துகள் எந்த நேரத்தில் இயக்கப்பட உள்ளன என்பது குறித்து அறிவிக்கும் வகையில், நான்கு நகரங்களுக்கும் தனித்தனி செயலிகளை உருவாக்கவும் உத்தரவிட்டுள்ளனர்.

இந்த உலகம், மாற்றுத் திறனாளிகளுக்கும், கர்ப்பிணிகளுக்கும், முதியோருக்கும் சொந்தமானது என்பதால், பொது போக்குவரத்தை அவர்களும் அணுகும் வகையில் அமைக்க உத்தரவிட்டுள்ளனர். தாழ்தள பேருந்துகளையும் இயக்கும் வகையில் சாலைகளையும், வேகத்தடைகளையும் அறிவியல் பூர்வமாக அமைக்க உத்தரவிட்ட நீதிபதிகள், பேருந்து நிறுத்தங்கள், மாற்றுத் திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் அமைக்கவும், அவர்கள் பேருந்தில் ஏறி, இறங்க ஏதுவாக பொறுமையுடன் செயல்படும் வகையில் ஓட்டுனர்களுக்கு பயிற்சி அளிக்கவும் உத்தரவிட்டனர்.

Next Story
ai in future agriculture