வணிக ரீதியான ஆவின் பால் விலை மட்டுமே உயர்வு: அமைச்சர் விளக்கம்

Aavin Milk Price
தமிழகத்தில் வணிக ரீதியான ஆவின் பால் விலை மட்டுமே உயர்த்தப்பட்டு உள்ளது. மக்கள் பயன்படுத்தும் பாலின் விலை உயர்த்தப்படவில்லை என்று பால்வள துறை அமைச்சர் நாசர் செய்தியாளர்களிடம் இன்று கூறியுள்ளார்.
தமிழகத்தில் இப்போது சமன்படுத்தப்பட்ட நீல நிற பாக்கெட் ஆவின் பால், அட்டைதாரர்களுக்கு லிட்டர் 37 ரூபாய்க்கும், சில்லறை விலையாக ரூ.40-க்கும் கொடுக்கப்படுகிறது. நிலைப்படுத்தப்பட்ட பச்சை நிற பாக்கெட் பால், அட்டைதாரர்களுக்கு ரூ. 42க்கும், சில்லறை விலையில் ரூ.43-க்கும் விற்கப்படுகிறது. இந்த இரண்டு பாலின் விலையிலும் எந்த மாற்றமும் இப்போது செய்யப்படவில்லை.
ஆனால், 6% கொழுப்புச் சத்து நிறைந்த ஆரஞ்சு நிற 'பிரீமியம்' பாலின் சில்லறை விலை தற்போது லிட்டர் 48 ரூபாயில் இருந்து 60 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இது, அட்டைதாரர்களுக்கு வழக்கமான 46 ரூபாய் விலையிலேயே விற்பனை செய்யப்படும் எனவும் சொல்லப்பட்டுள்ளது.
அதுபோல 6.5% கொழுப்புச் சத்து நிறைந்த சிவப்பு நிற 'டீமேட்' பாலின் விலையானது லிட்டர் 60 ரூபாயிலிருந்து, ரூபாய் 76 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், பிரவுன் நிற 'கோல்ட்' பாலின் விலையானது லிட்டர் 47 ருபாயிலிருந்து 56 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதுபற்றி சென்னை அடையாறில் செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசும்போது, இந்திய அளவில் தமிழகத்திலேயே பால் விலை குறைவு. அதுவும் ஆவின் பாலின் விலை மிக குறைவு. இதுவே, தனியார் பாலாக இருந்தாலும் அல்லது பிற மாநிலங்களில் விற்பனை செய்யப்படும் பாலாக இருந்தாலும் அங்கெல்லாம் விலை அதிகமாகத்தான் உள்ளது. குஜராத்தின் பிரசித்தி பெற்ற அமுல் போன்ற பிற பால் நிறுவனங்களின் பாலின் விலையை விட ஆவின் பால் விலை தமிழகத்தில் குறைவு என கூறியுள்ளார்.
ஆவினில் தவறு செய்யும் அதிகாரிகள் மீது இரும்புகரம் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu