மக்களே உஷார்! தமிழகத்தில் மேலும் 8 பேருக்கு ஒமிக்ரான் அறிகுறி

மக்களே உஷார்! தமிழகத்தில் மேலும் 8 பேருக்கு ஒமிக்ரான் அறிகுறி
X
தமிழகத்தில் மேலும் 8 பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் தொற்றுக்கான அறிகுறி கண்டறியப்பட்டுள்ளதாக, மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்து மக்களின் இயல்பு வாழ்க்கை படிப்படியாக திரும்பி வருகிறது. இந்த சூழலில், மக்களின் நிம்மதியை கெடுக்கும் வகையில் ஒமிக்ரான் தொற்றின் பரவல் உலக நாடுகளில் அதிகரித்து வருகிறது. இந்தியாவிலும் ஒமிக்ரான் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. ஒமிக்ரான் இதுவரை 73 நாடுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் 11 மாநிலங்களில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கு தமிழகமும் விதிவிலக்கல்ல. தமிழகத்தில் ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நேற்று தெரிவித்தார். நைஜீரியாவில் இருந்து வந்த அந்த நபரோடு தொடர்பில் இருந்த மேலும் 7 பேருக்கு புதிய வகை கொரோனா இருக்குமோ என்ற அச்சம் உண்டானது.

இந்த சூழலில், மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: நைஜீரியாவில் இருந்து வந்த நபருக்கு ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், அவருடன் தொடர்பில் இருந்த 7 பேருக்கும் கொரோனா தொற்றின் 'S' வகை திரிபு அறிகுறிகள் தென்பட்டுள்ளன.

அதுமட்டுமின்றி, காங்கோவில் இருந்து தமிழகம் வந்த பெண் ஒருவருக்கும், இதேபோல் 'S' வகை திரிபு கண்டறியப்பட்டுள்ளது எனவே, தமிழகத்தில் கூடுதலாக 8 பேருக்கு ஒமிக்ரான் அறிகுறி தெரிய வந்துள்ளது. இதில் இருந்து பாதுகாத்துக் கொள்ள, பொதுமக்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும். அனைவரும் தடுப்பூசி செலுத்தி, கொரோனா வழிகாட்டுதல்களை தொடர வேண்டும் என்றார்.

தமிழகத்தில், ஒமிக்ரான் பாதிப்பு 8 ஆக உயரும் என்ற சுகாதாரத்துறை செயலாளர் கூறியிருப்பது, கவலையை ஏற்படுத்துவதாக உள்ளது.

Tags

Next Story