மனுஷனை மனுஷன் சாப்பிடுறாண்டா தம்பி பயலே; மாறுவதெப்போ தீருவதெப்போ நம்ம கவலை? நிஜமாகும் வரிகள்..!
காசு கொடுத்தால் காரியம் நடக்கும் என்பதற்கான மாதிரி கார்ட்டூன் படம்.
1956 ம் ஆண்டு வெளிவந்த தமிழ் சினிமாவான ''தாய்க்கு பின் தாரம்'' என்ற திரைப்படத்தில் அப்படத்தின் கதாநாயகன் எம்.ஜி.ஆர் இந்த பாட்டை பாடுவார். தன்னுடைய கணீர் குரலால் அனைவரின் இதயங்களிலும் இடம் பிடித்தவர் பின்னணி பாடிய டிஎம்எஸ். முன்னதாக சினிமாவில் பாடிய பாட்டின் வரிகள் தற்போதைய வாழ்க்கை முறையில் நிஜமாகி வருவதாக அக்கால சினிமா ரசிகர்களும், சமூக ஆர்வலர்களும், தெரிவித்துள்ளதுதான் இதன் ஹைலைட்டே.
அதாவது மனுஷனை மனுஷன் சாப்பிடுகிறான்.... சாப்பிடுகிறான் என்பதற்கு உண்பதாக அர்த்தம் இல்லை. அதாவது மனுஷனை மனுஷனே பல விதங்களில் ஏமாற்றி அதில் வரும் வருமானத்தில் அவனுடைய ராஜபோக போஜன வாழ்க்கையினை நடத்தி வருவதுதான் இதன் உண்மையான பொருள்.
ஐந்தறிவு விலங்கும் மனசாட்சியும்
காடுகளில் வசிக்கும் விலங்குகளில் மாமிச பட்சிகளும் உண்டு. இந்த விலங்குகள் தன்னுடைய வயிற்றில் பசி ஏற்படும்போது மட்டுமே சாதுவான பிராணிகளை அடித்து உணவாக உட்கொள்ளும். மற்ற நேரங்களில் சாது பிராணிகள் பயந்தாலும் இது அதனை விட்டுவிடும். ஐந்தறிவு படைத்த விலங்கினங்களுக்கே இந்த மனசாட்சி இருக்கும்போது ஆறறிவு படைத்த மனிதன் தன்னுடன் வாழ்பவர்களையே ஏமாற்றி போலி வாழ்க்கை வாழ்ந்து வருகிறான் என எண்ணும்போது அக்காலத்தில் பாடிய தலைப்பிலான பாட்டுதான் நினைவிற்கு வருகிறது.
பேராசையே பெருநஷ்டம்
மனிதர்கள் பலவிதம். ஒவ்வொன்றும் ஒருவிதம். இதுவும் சினிமா பாட்டுதான். இந்த பாடலின் அர்த்தமானது, மனிதர்கள் பல்வேறு குணம்படைத்தவர்களாக உள்ளனர். அவர்களில் ஒவ்வொருவரும் மாறுபட்ட குணங்களை உடையவர்களே என பொருள்படும். இருப்பதைக்கொண்டு வாழ்க்கை முறையினை எளிமையாக நடத்த பழகிக்கொள்ள வேண்டும். அதைவிடுத்து பேராசைப்பட்டு குறுக்கு வழியில் வாழ்வினை உயர்த்த, நேர்மையற்ற செயல்களில் களம் இறங்கி கடைசியில் இருப்பதையும் தொலைப்பவர்களும் உண்டு.
தலைவிரித்தாடும் ஊழல்
ஒரு நாடோ, அல்லது ஒரு மாநிலமோ நல்ல வளர்ச்சி நிலையை அடைய வேண்டும் என்றால் அம்மாநிலத்தின் அல்லது நாட்டின் வளர்ச்சியானது நல்வழியில் இருக்கவேண்டும். அதாவது அந்த அரசின் நிர்வாகமானது சீர்குலையாமல் இருக்க வேண்டும். அதற்கான திட்டங்களை முறைப்படுத்த வேண்டும். ஒரு நாடு நன்றாக வளர்ச்சி அடைய வேண்டுமானால் அந்நாட்டில் வாழும்குடிமக்கள் அனைத்து நிலைகளிலும் வளர்ச்சி பெற வேண்டும்.
ஆனால் நம்முடைய நாட்டைப்பொறுத்தவரை அரசின் இயந்திரம் என்று சொல்லக்கூடிய அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளில் ஒரு சிலர் ஊழல்குற்றச்சாட்டில் ஈடுபடும்போது அந்நிர்வாகமானது சீர்குலைகிறது. இதில் எல்லா அதிகாரிகளையும், அரசியல்வாதிகளையும் சொல்லிவிட முடியாது. அதிகாரி நேர்மையானவராக இருந்தால் அவருக்கு பல விதத்திலும் பிரஷர் கொடுக்க அரசியல்வாதிகள் இருக்கத்தான் செய்கின்றனர். நேர்மையற்ற அதிகாரிகளினால் அரசிற்கு வருமான இழப்பும் அதிகரிக்கிறது. இதனால் நேர்மையான அதிகாரிகள் கூட முறையற்ற செயலுக்கு உறுதுணையாகும் சூழ்நிலைகளுக்கு கட்டாயமாக தள்ளப்படுகின்றனர் என்பதுதான் உண்மையும் கூட.
பெருகிவரும் லஞ்ச லாவண்யம்
தன்னுடைய வேலையானது விரைவில் முடிய வேண்டும் என பொதுமக்கள் மற்றும் பெரிய பெரிய நிறுவனங்களால் அதிகாரிகளுக்கு தரப்பட்ட அன்பளிப்பே லஞ்சம். தற்போது இந்திய நாட்டில் இது தலைவிரித்தாடுகிறது. எந்த அரசியல் கட்சிகள் நாட்டை ஆண்டாலும் லஞ்சத்தினை மட்டும் அறவே ஒழிக்கவே முடியவில்லை. அதுவும் நெட்வொர்க் அமைத்து இதற்கு வலை வீசும் புரோக்கர்கள் நாட்டில் பலர் உண்டு. அண்மையில் பத்திரிகையில் வெளிவந்த செய்தியில் வட நாட்டில் அரசு அலுவலகத்தில் பியூனாக வேலைபார்த்தவருக்கு பல கோடி சொத்துகள் உள்ளதாக தகவல் வந்தது. இது எப்படி? அவரால் சாத்தியமானது? நேர்மையற்ற வழியில் சென்றவருக்கு அவர் உறுதுணைபோனதால் அவர் கோடீஸ்வரர் ஆனதோடு அரசுக்கு பெரும் இழப்பிற்கான காரணகர்த்தாவும் ஆகிவிடுகிறார். இதுபோல் நாட்டில் அனைத்துதுறைகளிலுமே லஞ்சம் தலைவிரித்தாடுகிறது .
இதனை ஒழிக்க முன்வரும் நேர்மையான ஆபீசர்களுக்கு டிரான்ஸ்பர், டீபுரோமோஷன் என பல தண்டனைகள் பரிசாக அளிக்கப்படுவதால் அவர்களும் ஒரு காலகட்டத்தில் நமக்கேன் வம்பு என கண்டுகொள்ளாமல் இருந்து விடுகிறார்கள். இதுபோல் தற்போது நாட்டில் லஞ்சம் இல்லாத துறையே இல்லை என்று கூறும் அளவுக்கு விரிந்துகிடக்கிறது. யாராவது ஒரு நபரால் ஏற்படும் களங்கம் அத்துறையையே தலைகுனிய வைக்கிறது.
அரசியல் கட்சிகளின் ஆடம்பரம்
கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பிருந்த அரசியல் கட்சிகளின் நடைமுறை செயல்பாடுகள் தற்போது தலைகீழாக மாறிவருகிறது. உடுப்பதற்கு மாற்று துணியில்லாமல் நாட்டு மக்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்காகவே போராடிய காலம் மலையேறிவிட்டது. தற்போது ஆடம்பர அரசியல் தலையெடுத்துள்ளது. இதனால் ஒரு சாதாரண பொதுக்கூட்டத்திற்கு கூட லட்சக்கணக்கான ரூபாய்செலவு செய்யும் நிலையே தொடர்கிறது.
இது தேவைதானா? எத்தனையோ குடும்பங்கமனிதர்கள் ஒரு வேளை சாப்பாட்டிற்கு வழி இல்லாமல் கஷ்டப்படும்போது இதுபோன்ற அரசியல் விளம்பரங்கள் தேவைதானா? எனவும் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர். அதுமட்டுமல்லாமல் தற்போதுள்ள அரசியல் நாகரிக போட்டியில் மற்றவர்களை பின்னுக்கு தள்ளிவிட்டு தாம் முந்திவிட வேண்டும் என பல வித குற்றச்செயல்களும் அரங்கேறி வருகிறது.
இதுபோல் சமூகத்தில் நடக்கும் நிகழ்வுகள் எண்ணற்றவைகளை உதாரணமாக சொல்லலாம். குறிப்பாக கடந்த சில வருஷங்களுக்கு முன்பாக தமிழ் சினிமாவில் அரங்கேறிய காட்சியானது, மருத்துவத்துறையில் இன்று நிஜமாகிவருகிறது. நிஜமான நிகழ்வைத்தான் அவர்கள் படமாக்கினார்கள் என்று இப்போதுதான் பொதுமக்களுக்கு தெள்ளத்தெளிவாக புரிந்து வருகிறது.
சாதாரண நோய்க்கும் பல கட்ட பரிசோதனை
தற்போது தமிழகத்திலுள்ள அனைத்து ஆஸ்பத்திரிகளிலும் சாதாரண காய்ச்சல், சளி, தலைவலி, என்று சென்றால் கூட குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய் பில் ஆகிவிடுவதாக பொதுமக்கள் சளித்துக்கொள்வதை காணமுடிகிறது. இதனால் ஒருசில குடும்பத்தினர் ஆஸ்பத்திரி பக்கமே தலைகாட்டாமல் தமக்கு தெரிந்த கைவைத்தியத்தை செய்துகொள்கின்றனர்.
ஆகவே இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது மனுஷனை மனுஷன்தான் பணம் என்ற போர்வையில் மறைமுகமாக சாப்பிடுகிறான். முன்பெல்லாம் சாதாரணமாக 3 நாட்களுக்கு மட்டும் மருந்து மாத்திரைகளை எழுதிக்கொடுத்த டாக்டர்கள் இன்று குறைந்த பட்சம் 10 அல்லது 20 நாட்களுக்கு எழுதித்தருகின்றனர். ஏன்? எல்லாம் பணம் செய்யும் வேலையா? இது தேவையா? என யாரும் அவர்களிடம் பயந்து கொண்டு கேட்பதில்லை. இதனால் ஒரு சிலர் அவர் எழுதிக்கொடுத்தாலும் 3 நாட்களுக்கு மட்டும் மருந்து மாத்திரை வாங்கி சாப்பிடுபவர்களும் உண்டு.
யார் உண்மையான பணக்காரன்
இன்றைய சூழ்நிலையில் பணம் வைத்திருப்பவன் பணக்காரன் இல்லை. எவ்வித நோயும் இல்லாதவர்களே பணக்காரர்களாக பார்க்கப்படுகிறார்கள். அந்த வகையில் இன்றைய உலகில் நோய்களும் பலவிதத்தில் மனிதனை ஆட்டிப்படைத்துவருகிறது. அதற்காக சிகிச்சை மேற்கொள்ள சென்றால் இதனை விட கொடுமையாகவே உள்ளது. ஒவ்வோர் ஆஸ்பத்திரியிலும் வெவ்வேறான சிகிச்சைகள். லட்சக்கணக்கில் பணம் செலவழித்தாலும் நோய் தீர்ந்த பாடில்லை.
இதுபோல அனுதினமும் புலம்பிக்கொண்டு அலைபவர்கள் எத்தனையோ பேர் நம் நாட்டில் உள்ளனர். மருத்துவத்துறையிலும் மனித நேயம் மலிந்துவிட்டதால் இதுபோன்ற செயல்கள் தினந்தோறும் அரங்கேறி வருகின்றன. குறிப்பாக அரசு ஆஸ்பத்திரியில் நடக்கும் சம்பவங்களை சொல்லவே வேணாம். பணம் இல்லாமல் அங்கு எந்த காரியமும் நடப்பதில்லை என்பது பொதுமக்களின் நிரந்தர குற்றச்சாட்டு.
ஆக அரசானது ஏழை , எளியோருக்காக பல்வேறு நலத்திட்டங்களை இலவசமாக கொண்டு வந்தாலும் அதற்கும் உரிய விலையினை இடைத்தரகர்களுக்கு கொடுத்தால்தான் எந்தவேலையும் நடக்கிறது. இதுவெல்லாம் எப்போதுதான் மாறும்? பொறுத்திருங்கள்..நிச்சயம். மாறும்... தற்போதைய நடைமுறைகளை அக்காலத்திலேயே கணித்து எழுதிய பாடலின் வரிகள்தான் மனுஷனை ...மனுஷன் சாப்பிடறாண்டா ...தம்பிப் பயலே...தற்போது அது உண்மையாகி வருகிறது ...அல்லவா? பாடல் எழுதியவரை பாராட்டத்தான்வேண்டும்.
மக்களின் பலவீனமே மருத்துவர்களின் பலமாகிறது. 'ஐயா..என் புள்ளைய எப்பிடியாவது காப்பாத்துங்க ஐயா..' என்ற ஓலக்குரல் ஒன்றே போதும். மருத்துவமனைகள் பில் போடுவதற்கு. மருத்துவர்களை 'கடவுளாக' பார்க்கும் மக்களுக்கு, மருத்துவர்கள் எடுத்துக்காட்டானவர்களாக இருக்க வேண்டும். கல்வியும், மருத்துவமும் இலவசமாக்கப்படவேண்டும்.
(இது சராசரி மனிதர்களின் கூக்குரல்)
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu