பொதுத்தேர்வு பணிகளை கண்காணிக்க அதிகாரிகள் நியமனம்: பள்ளி கல்வித்துறை
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு அடுத்த மாதம் தொடங்கி நடைபெற உள்ளது. இதில் பிளஸ்-2 வகுப்புக்கு மார்ச் 1ம் தேதியும், பிளஸ்-1 வகுப்புக்கு மார்ச் 4ம் தேதியும், பத்தாம் வகுப்புக்கு மார்ச் 26ம் தேதியும் தேர்வு தொடங்கப்பட இருக்கிறது.
அந்த வகையில் பொதுத்தேர்வுகளை வருகிற ஏப்ரல் மாதம் 8ம் தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டு ஏற்கனவே அதற்கான அட்டவணையும் வெளியிடப்பட்டுவிட்டது. அதன் அடிப்படையில் பொதுத்தேர்வுகளுக்கு மாணவர்கள் தங்களை தயார்ப்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் பொதுத்தேர்வுகளை கண்காணிக்க ஒவ்வொரு ஆண்டும் பள்ளிக்கல்வித்துறையின் அரசு தேர்வுத்துறை சார்பில் அதிகாரிகள் நியமனம் செய்யப்படுவது வழக்கம்.அதன்படி, தமிழ்நாடு முழுவதும் பொதுத்தேர்வு பணிகளை கண்காணிக்கவும், மேற்பார்வையிடவும் பள்ளிக்கல்வி, தொடக்கக்கல்வி இயக்ககங்கள், பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வித்துறை, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், ஆசிரியர் தேர்வு வாரியம், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் ஆகிய துறைகளை சேர்ந்த அதிகாரிகளை நியமனம் செய்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன் அரசாணை பிறப்பித்துள்ளார்.
இதில் சென்னை மாவட்டத்துக்கு ஆசிரியர் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஸ்ரீவெங்கடபிரியாவும், செங்கல்பட்டு மாவட்டத்துக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குனர் ஆர்த்தியும், காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் உமாவும், வேலூர் மாவட்டத்துக்கு தொடக்கக்கல்வி இயக்குனர் கண்ணப்பனும், நாகப்பட்டினம் மாவட்டத்துக்கு பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்குனர் பழனிசாமியும், மதுரை மாவட்டத்துக்கு தனியார் பள்ளிகள் இயக்குனர் நாகராஜமுருகனும் உள்பட 38 மாவட்டங்களுக்கும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் பொதுத்தேர்வுகள் தொடர்பான முன்னேற்பாடுகள் குறித்து நாளை செவ்வாய்க்கிழமை திருச்சியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu