அ.தி.மு.க.வின் எதிர்காலத்தை நிர்ணயிக்க போகும் நவம்பர் 21-ம் தேதி
மக்கள் திலகம், புரட்சித் தலைவர் என தமிழக மக்களால் அன்போடு போற்றப்பட்ட மறைந்த எம்.ஜி.ஆரால் 1972 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அ.தி.மு.க. என்ற மாபெரும் கட்சி தற்போது சோதனையின் உச்சகட்டத்தில் இருக்கிறது. அதனால் தான் கட்சி தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. 1967ஆம் ஆண்டில் இருந்தே தி.மு.க., அ.தி.மு.க. என்ற இந்த இரு கட்சிகளும் தான் மாறி மாறி தமிழகத்தின் ஆட்சி கட்டிலில் அமர்ந்து வருகின்றன. காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்தி தி.மு.க. ஆட்சி அண்ணா தலைமையில் அமைவதற்கு எந்த எம். ஜி. ராமச்சந்திரன் தனது திருமுகத்தை காட்டி மக்களின் மனநிலையை மாற்றினாரோ அதே எம்.ஜி.ஆர். தான் தி.மு.க.விலிருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் அ.தி.மு.க. என்ற இயக்கத்தை தொடங்கிய பின்னர் தனது இறுதி மூச்சு வரை முதல்வர் நாற்காலியில் அமர்ந்திருந்தார். அவர் உயிருடன் இருக்கும் வரை கருணாநிதி தலைமையிலான தி.மு.க.வால் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை என்பது வரலாற்று உண்மை.
ஆனால் எம்.ஜி.ஆரின் மறைவுக்கு பின்னர் அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டது எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மையார் தலைமையில் அ.தி.மு.க. ஜானகி அணி என்றும், ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க. ஜெ அணி என்றும் இரண்டாக பிரிந்து 1989 ஆம் ஆண்டு சட்டமன்றதேர்தலை சந்தித்தனர். இந்த இரண்டு பேருக்கும் இடையே ஏற்பட்ட மோதலின் காரணமாக அப்போது அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னம் தேர்தல் ஆணையத்தால் முடக்கி வைக்கப்பட்டிருந்தது. இரட்டை புறா சின்னத்தில் நின்ற அ.தி.மு.க.வின் ஜானகி தேர்தலில் படுதோல்வி அடைந்தது. சேவல் சின்னத்தில் நின்ற ஜெயலலிதா அணி 29 இடங்களில் வெற்றி பெற்றது. எதிரி இரண்டுபட்டு போனதால் தி.மு.க. எளிதாக ஆட்சியைப் பிடித்தது. கருணாநிதி முதலமைச்சர் ஆனார் .ஆனால் அந்த ஆட்சி இரண்டு ஆண்டுக்கு மேல் நீடிக்கவில்லை. காரணம் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக இருந்ததாக கூறி அப்போது இருந்த மத்திய அரசு 1991 ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் தேதி தி.மு.க. ஆட்சியை கலைத்தது .ஆதலால் மீண்டும் தமிழக சட்டமன்றம் தேர்தலை சந்திக்க கூடிய சூழல் ஏற்பட்டது.
1989இல் ஏற்பட்ட தோல்விக்கான காரணத்தை உணர்ந்த ஜெயலலிதாவும், ஜானகியும் தேர்தல் முடிவுக்கு பின்னர் ஒன்று சேர்ந்தார்கள். இதன் காரணமாக முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னம் மீண்டும் அ.தி.மு.க விற்கு கிடைத்தது. அப்போது நடைபெற்ற மருங்காபுரி, மதுரை கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் அ.தி.மு.க. களம் இறங்கி ஆளுங்கட்சிக்கு எதிராக இரண்டு இடங்களில் வெற்றி பெற்றது. இதுவும் வரலாறு.
அ.தி.மு.க.வில் எம்.ஜி.ஆர். மறைவுக்கு பின்னர் இப்படி ஒரு பிளவு ஏற்பட்டது போல ஆலமரமாய் வளர்த்து அ.தி.மு.க.வை கட்டிக் காத்த ஜெயலலிதா மறைவுக்கு பின்னரும் மீண்டும் ஒரு பிளவு ஏற்பட்டது. இந்த பிளவு உச்சகட்டத்தில் இருந்த நேரத்தில் பிரதமர் மோடி தலையிட்டதால் அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி அணி ஓ.பன்னீர் செல்வம் அணி ஒன்றாக்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் பதவியில் தொடர்ந்தார். கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓ. பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்டார். கட்சிக்கு ஓ. பன்னீர்செல்வம் என்றும், ஆட்சிக்கு எடப்பாடி பழனிசாமி என்றும் எழுதப்படாத ஒரு ஒப்பந்தத்தின் காரணமாக நான்கரை ஆண்டு காலம் அ.தி.மு.க. ஆட்சி நல்லபடியாக நடந்து முடிந்தது.
2016 சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமிக்கும் ஓ. பன்னீர் செல்வத்திற்கும் இடையே நீரு பூத்த நெருப்பாக இருந்த ஈகோ பிரச்சனை மீண்டும் எழுந்ததால் அந்த தேர்தலிலேயே அவர்கள் தடுமாற்றம் அடைந்தனர். இதன் காரணமாக மு. க. ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. வெற்றி பெற்று பத்தாண்டுகளுக்கு பின்னர் ஆட்சியில் அமர்ந்து விட்டது. ஆட்சியை பறிகொடுத்த அ.தி.மு.க.வில் மீண்டும் கலகம் வெடித்தது. எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர் செல்வம் இடையே யார் பெரியவர் என்ற போட்டியின் போட்டி ஏற்பட்டது.
இந்த நேரத்தில் தான் எடப்பாடி பழனிசாமி கட்சியை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் என்பதற்காக ஒற்றை தலைமை விவகாரத்தை கையில் எடுத்தார். ஆனால் இதற்கு ஓ. பன்னீர்செல்வம் ஒத்துப் போகவில்லை. பல நேரங்களில் கட்சியின் நலன் கருதி எடப்பாடி சொல்வதற்கெல்லாம் தலையாட்டிய ஓ. பன்னீர்செல்வம் இந்த நேரத்தில் நிமிர்ந்து விட்டார். இதன் காரணமாக போட்டி பொதுக்குழு போட்டி, செயற்குழு என்ற நிலைமைக்கு போனது கட்சி. இறுதியாக எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் ஓ. பன்னீர்செல்வமும் அவரது ஆதரவாளர்களும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டனர்.பதிலுக்கு ஓ. பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஒரு போட்டி கூட்டத்தை நடத்தி அதில் எடப்பாடி பழனிசாமி உட்பட முக்கிய நிர்வாகிகளை நீக்கிவிட்டதாக அறிவித்தார். இப்படி இவர்கள் போட்ட சண்டை, போட்டி பொதுக்குழு கோர்ட்டுக்கு சென்றது.
கோர்ட்டில் தனி நீதிபதி ஜெயச்சந்திரன் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது. இது கட்சியின் விதிமுறைகளுக்கு முரணானது எனக் கூறி தீர்ப்பளித்தார். இதனை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பினர் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். இந்த மேல்முறையீட்டு மனுவை சரித்த இரண்டு நீதிபதிகள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தீர்ப்பு அளித்தனர். ஓ. பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாக தனி நீதிபதி அளித்த தீர்ப்பு ரத்து செய்யப்பட்டது. இதனை எதிர்த்து ஓ. பன்னீர்செல்வம் தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது. எடப்பாடி பழனிசாமிக்கும் ஓ.பன்னீர் செல்வத்திற்கும் தங்களது தரப்பு நியாயங்களை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்யும்படி ஆணையிடப்பட்டது.இருவரும் எழுத்து பூர்வமாக தங்களது நியாயமான கருத்துக்களை ஆவணமாக பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கு நவம்பர் 21 ஆம் தேதி அதாவது வருகிற திங்கட்கிழமை விசாரணைக்கு வர இருக்கிறது. அன்று இரு தரப்பு வழக்கறிஞர்களும் நீதிபதி முன் விவாதம் செய்வார்கள். இந்த விவாதத்தின் அடிப்படையில் உச்சநீதிமன்ற நீதிபதி வழக்கை விசாரித்து தீர்ப்பு அளிக்க இருக்கிறார். தீர்ப்பு அன்றைய தினமே அளிக்கப்படுமா அல்லது தேதி குறிப்பிடப்படாமல் வழக்கு ஒத்திவைக்கப்படுமா என்பது உச்சநீதிமன்றத்திற்கே வெளிச்சம். ஒன்று எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வர வேண்டும். அல்லது ஓ. பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக வர வேண்டும். தீர்ப்பு எப்படி வந்தாலும் இதில் யாராவது ஒருவர் வெற்றி பெறலாம். ஒருவர் தோல்வி அடையலாம். ஆனால் ஒட்டுமொத்தமாக பார்த்தால் அ.தி.மு.க. என்ற ஒரு இயக்கத்திற்கு அது தோல்விதான். அதிமுக ஒன்றாக இருந்தால் தான் அக்கட்சி தனது வாக்கு வங்கியை இழக்காமல் இருக்க முடியும். இதனை உணராமல் இரு தலைவர்களும் போட்டி போட்டுக் கொண்டு ஈகோ பிரச்சினையால் உச்சநீதிமன்றத்திற்கு சென்றுவிட்டனர்.
எனவே இனி உச்ச நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பே அ.தி.மு.க.வின் எதிர்காலத்தை நிர்ணயிக்க இருக்கிறது. இந்த தீர்ப்பின் மூலம் யார் ஒருவர் தோற்றாலும் நிச்சயமாக அதோடு அவர்கள் சமாதானம் அடையப் போவதில்லை. உடனடியாக தேர்தல் ஆணையத்தின் கதவுகளை தட்டுவார்கள். தேர்தல் ஆணையம் கட்சியின் விதிமுறைகளை சீர் தூக்கி பார்த்து தனது தீர்ப்பை அளிக்கும். தேர்தல் ஆணைய தீர்ப்பில் அரசியல் கலந்தால் நிச்சயமாக அ.தி.மு.க. வின் சின்னமான இரட்டை இலை முடக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும் என்பதே உண்மை.என்ன நடக்க போகிறது என்பதை தெரிந்துகொள்ள வருகிற 21 ஆம் தேதி வரை காத்திருப்போம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu